பழங்குடியின மக்களின் கல்வி நிலையில் இந்திய சராசரியை விட தமிழ்நாட்டின் நிலை குறைவாக இருக்கிறது என்று எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இன்று மக்களவையில் பழங்குடியின பெண்களின் கல்வியறிவு விகிதத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் எவை, 2020-ஆம் ஆண்டில் பழங்குடியின (ST ) கல்வியறிவு குறித்த மாநில வாரியான தரவு விவரங்களைத் தருக என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அளித்துள்ள எழுத்துபூர்வமான பதிலில், கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அனைத்திந்திய அளவில் பழங்குடியின ஆண்களின் படிப்பறிவு 59% ஆக இருக்கிறது, பெண்களின் படிப்பறிவு 49.4% ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடியின ஆண்களின் கல்வியறிவு 54.3% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 46.8% ஆகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண் கல்வியில் 4.7% ம் பெண் கல்வியில் 2.6% ம் குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
பொதுவாக படிப்பறிவு பெற்றோர் சதவீதத்தில் இந்தியாவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டில் பழங்குடியினர் கல்வியறிவு நிலை இப்படி பின்னடைவாக இருப்பது வேதனையளிக்கிறது, தமிழ்நாட்டில் பழங்குடியினர் கல்வியறிவு சதவீதத்தை உயர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்புத்திட்டம் ஒன்றை வகுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ரவிக்குமார் எம்.பி.கேட்டுக்கொண்டுள்ளார்.