பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு - ரேண்டம் எண் வெளியிடாதது குறித்து அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் கலந்தாய்வில் 431 கல்லூரிகள் கலந்துகொள்வதாக தெரிவித்தார். கேரள மாநிலம் கொல்லத்தில் படித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதா தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பதாகவும், மொத்தம் 133 மாணவ, மாணவியர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்களை பெற்றிருப்பதாகவும் கூறிய அமைச்சர், இந்த ஆண்டு ரேண்டம் எண் வெளியிடுவதற்கான அவசியம் ஏற்படவில்லை என்றார்.
அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின்கீழ் 22 ஆயிரம் பேர் பொறியியல் படிப்புகளில் சேர உள்ளனர். இந்த இட ஒதுக்கீட்டில் பெயரை சேர்த்துக் கொள்ளாதவர்கள் வரும் 19 ஆம் தேதிக்குள் பெயரை சேர்க்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தரவரிசைப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ, வேறு குறைகள் இருந்தாலோ வரும் 19 ஆம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வுக்கான சேவை மையத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வும், 25 ஆம் தேதி முதல் அக்டோபர் 21 ஆம் தேதி வரை பொதுப்பிரிவு கலந்தாய்வும் நடைபெற உள்ளது. தரவரிசையை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி தரவரிசைப் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வு குறைகளை களைய உதவி எண் 18004250110 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.