அணுசக்தி துறை தேர்வுக்கு தமிழகத்திலும் ஒரு தேர்வு மையத்தை அறிவிக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அணுசக்தி துறை தலைவர் டாக்டர் தினேஷ் ஸ்ரீ வஸ்தவாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில், “அணு எரி பொருள் வளாகம் இம்மாதம் 21ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் Stage I Priliminary (Screening) Test for the post of Stipendary Trainee Category - I, Post Code 21901- 21911. Advertisement No. NFC/02/2019 நியமன முதல்படித் தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்திருந்தது.
இத்தேர்வு எழுத நாடு முழுவதும் 6 மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மையம் கூட தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வர்கள் பெங்களூரில் போய் தேர்வெழுத வேண்டும் என்ற நிலை உள்ளது. தனித்திரு என்கிறது அரசின் கோவிட் வழிகாட்டுதல் விதிமுறை. ஆனால் மாணவர்களை மாநிலம் விட்டு மாநிலம் அலையவிடுகிறது ஒன்றிய அரசு.
கோவிட் பெருந் தொற்றின் இரண்டாவது அலை முடியவில்லை. ஜுன் 28 அன்று கூட கர்நாடகா முழுவதும் 2576 புதிய தொற்றுகள், 93 மரணங்கள். இவற்றில் பெங்களுர் 20 சதவீதம் எனில் எப்படி மன அமைதியோடும், உரிய கவனத்தோடு தேர்வர்கள் அலைந்து தேர்வு எழுத முடியும். டெல்டா பிளஸ் எச்சரிக்கைகள் வேறு விடுக்கப்படுகின்றன.
உயர்கல்வி விகிதத்திலும், எண்ணிக்கையிலும் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள ஒரு மாநிலத்தை ஒன்றிய அரசு இப்படித்தான் அணுகுமா? தொடர்ந்து ஒன்றிய அரசின் தேர்வுகளில் எல்லாம் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதும் நாம் குரல் எழுப்புவதும் தொடர் கதையாக உள்ளது.
பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள அணுசக்தித்துறை தன்னுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும். தமிழகத்திலும் ஒரு தேர்வு மையம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.