சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட போதிலும் மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்கப்படும் என ஏன் அறிவிக்கவில்லை என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா 2ஆம் அலை காரணமாக சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுகள் குறித்து முடிவெடுக்காமல் இருந்த நிலையில், சமீபத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்த பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அப்போது சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய அரசு என்ன முடிவெடுத்திருக்கிறது என்றும், இதுகுறித்து கொள்கைரீதியிலான முடிவை 3 நாட்களில் எடுக்கவும், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதற்கு மத்திய அரசு, சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக 2 நாளில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல் தெரிவித்தது. எனவே, பொதுத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடப்பாண்டிற்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், மாணவர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்றும் இதில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் கூறி, மத்திய அரசு சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுகளை இந்த ஆண்டு ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்கப்படும் என்றும், மதிப்பெண் வழங்குவது குறித்து 2 வாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.