அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடி கல்வி உதவித்தொகையுடன் 4 வருட அறிவியல் ஆராய்ச்சி படிப்புக்கு சென்னிமலையை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி சுவேகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து சிகாகோவுக்கு உதவித்தொகை பெற்று செல்லும் ஒரே மாணவி சுவேகா மட்டும்தான்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த பாலத்தொழுவு காசிபாளையம் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் - சுகன்யா தம்பதியின் பிள்ளைகள், சுவேகா மற்றும் அச்யுதன். இவர்களில் சுவேகா, இரு ஆண்டுகளுக்கு முன் சென்னிமலையில் உள்ள தனியார் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து கொண்டிருந்போது, அவர் பள்ளியில் நடைபெற்ற விழாவொன்றில் டெக்டாரிட்டி அமைப்பைச் சேர்ந்த சரத் சாகர் என்பவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
அவர் பேசும்போது, “அறிவியல் ஆராய்ச்சி படிப்புக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஏழை குழந்தைகள் என்றாலும்கூட அதிக ஆர்வமும் கடின உழைப்பும் இருந்தால் அவர்கள் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித்தொகையுடன் அறிவியல் ஆராய்சி படிக்க முடியும்” எனக் கூறியுள்ளார். இதை கவனித்த மாணவி சுவேகா, சிகாகோ பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆராய்சி கல்வி பயில வேண்டும் என்ற தனது ஆர்வரத்தை அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
மாணவி சுவேகா ஆர்வத்தை கண்ட டெக்டாரிட்டி அமைப்பின் தலைவர் சரத் சாகர், தனது அமைப்பின் மூலம் நிர்வாக ஆளுமை மற்றும் தொழில்திறனுக்கான பயிற்சியை ஆன்லைன் மூலம் மாணவிக்கு அளித்துள்ளார். தற்போது பிளஸ் 2 படித்துக் கொண்டுள்ள மாணவி சுவேகா, இந்த பயிற்சியையும் பெற்று வந்துள்ளார்.
நள்ளிரவு மற்றும் அதிகாலை என தினந்தோறும் 16 மணி நேரம் கடின உழைப்பால் சிகாககோ பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான அனைத்து பயிற்சிகளை திறம்பட கற்றுகொண்ட அவர், அதையடுத்து இந்தாண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு விண்ணப்பத்திருந்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் 9,10 மற்றும் 11-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், வாலிபால், ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டு சாதனை, ஆராய்ச்சிக்கான அடிப்படை பயிற்சி மற்றும் உலகளவில் பல்வேறு அமைப்புகள் நடத்தி அறிவியல் போட்டி, டெக்டாரிட்டி அமைப்பில் பெற்ற ஆளுமை மற்றும் தனித்திறன் பயிற்சி, பல்வேறு மொழி பேச்சு திறன் ஆகியவற்றை குறிப்பிட்டிருந்தார்.
அவர் சமர்ப்பித்திருந்த கல்வி சான்றிதழ், உலகளவிலான போட்டி சான்றிதழ் மற்றும் அறிவியால ஆராய்ச்சி, மற்றும் பேச்சு திறன் ஆகியவற்றை முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையிலான தேர்வுகுழுவினர் ஆராய்ந்துள்ளனர். முடிவில், 4 ஆண்டு அறிவியல் இளங்கலை படிப்புக்கு சுவேகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும் அதில் 4 ஆண்டு படிப்புக்கான கல்விக்கட்டணம், தங்கும் விடுதி, போக்குவரத்து செலவு என 3 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையுடன் இளங்கலை பயில அனுமதி கடிதம் அனுப்பியுள்ளது. சிகாகோ பல்கலைக்கழகத்தில் தேர்வானது குறித்து சுவேகா கூறுகையில், “என் பெற்றோர் பெரிதாக படிக்காதவர்கள். போதிய கல்வித்தகுதி இல்லாத அவர்கள், என்னை அறிவியல் ஆராய்ச்சி பயில ஊக்குவித்தனர். எனது குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. தினந்தோறும் 16 மணி நேரம் படிப்பேன். ஊக்கமும் திறமையும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் இருந்தால், யாரொருவராலும் சாதிக்க முடியும் என்பதற்கு நானே ஒரு சாட்சி” என்றார் மகிழ்வுடன்.
மாணவி சுவேகாவுக்கு, வரும் 2022 - 2026ம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு சிகாகோ பல்கலைக்கழகத்தில் இருந்து அழைப்பு கடிதம் வந்துள்ளதாக் தெரிவித்தார். ‘பெண்களுக்கு கல்வி வேண்டும், உலகினை பேணுதற்கே’ என்ற பாரதிதாசனின் வார்த்தைக்கேற்ப ‘அறிவுடைய பெண்களால்தான் அறிவுடைய சமுதாயத்தை உருவாக்க முடியும்’ என்ற கூற்றை சாதித்து காட்டியுள்ளார் கிராமப்புற மாணவி சுவேகா!
- டி.சாம்ராஜ் | ரா.மணிகண்டன்