தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று யுஜிசி (UGC) எச்சரித்துள்ளது.
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் விடுத்துள்ள அறிக்கையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தங்களிடம் அனுமதி பெறாமல், தொலைநிலை படிப்புகளில் மாணாக்கரை சேர்த்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொலைநிலை படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை முழுமையாக மீறும் செயலாகும் என்று அவர் கூறியிருக்கிறார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெறாமல், எந்த உயர் கல்வி நிறுவனமும் தொலைநிலை, திறந்த நிலை மற்றும் ஆன்லைன் படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது என்றும் ரஜ்னிஷ் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 2014 - 15 வரை மட்டுமே, தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே அந்தக் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் சேர வேண்டாம் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அறிவுறுத்தி உள்ளார்.