“என் மகன் 97% மதிப்பெண் பெற்றவர்” - மத்திய அமைச்சருக்கு உயிரிழந்த மாணவரின் தந்தை பதில்!

“என் மகன் 97% மதிப்பெண் பெற்றவர்” - மத்திய அமைச்சருக்கு உயிரிழந்த மாணவரின் தந்தை பதில்!
“என் மகன் 97% மதிப்பெண் பெற்றவர்” - மத்திய அமைச்சருக்கு உயிரிழந்த மாணவரின் தந்தை பதில்!
Published on

இந்தியாவில் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்தான் வெளிநாட்டில் படிக்கிறார்கள் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், இது குறித்து உக்ரைன் தாக்குதலில் பலியான நவீனின் தந்தை பதிலளித்துள்ளார்.

மத்திய அமைச்சரின் கருத்துக்கு பதிலளித்து பேசிய நவீனின் தந்தை சேகரப்பா ஞானகவுடர், "இங்கு மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு நன்கொடை அதிகம். புத்திசாலி மாணவர்கள் வெளியூர் சென்று படிக்கும் போது, கர்நாடகாவுடன் ஒப்பிடுகையில் குறைந்த தொகையே செலவாகிறது. ஆனால் இங்கே ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ சீட் பெற கோடிகளில் பணம் செலுத்த வேண்டியுள்ளது. எனது மகன் நவீன் தனது பள்ளித் தேர்வில் 97 சதவிகிதம் மதிப்பெண்களை பெற்றுள்ளார்" என தெரிவித்தார்

இது குறித்து நவீனின் உறவினரான சித்தப்பா கூறுகையில், "நவீனின் குடும்பம் மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தந்தை தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். சேகரப்பா மற்றும் நவீனின் அம்மா எப்போதும் தங்கள் மகன் மருத்துவராக வேண்டும் என்று விரும்பினார்கள். உறவினர்கள் நாங்கள் அனைவரும் அவரை உக்ரைனுக்கு அனுப்ப பணம் செலுத்தினோம். மேனேஜ்மென்ட் கோட்டாவின் கீழ் உள்ள மருத்துவ சீட்டுக்கு இங்கே மிகவும் அதிகமாக செலவாகும் என்பதால், அவர் உக்ரைனில் படிக்க முடிவு செய்தார்" என்றார்.

கார்கிவ் நகரில் உணவு பொருட்களை வாங்கும் போது ரஷ்ய குண்டுவெடிப்பில் நவீன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

முன்னதாக, இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தான் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்கிறார்கள் என மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருந்தது நாடு முழுவதும் சர்ச்சைகளை எழுப்பியது.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, " வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்லக்கூடிய மாணவர்கள் 90 சதவிகிதம் பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தான். மாணவர்கள் ஏன் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்று விவாதிக்க இது சரியான நேரம் அல்ல" என கருத்து தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com