தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கையில், இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த எண்ணிக்கை செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதினைந்து லட்சமாக உயரக்கூடும் எனவும் கல்வி அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தள்ளிவைக்கப்பட்டன. பின்னர் பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, விதிமுறைகளுடன் ஆகஸ்ட் 17 ம் தேதியன்று 1,6,9 வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அடுத்தகட்டமாக ஆகஸ்ட 24ம் தேதி பிளஸ் ஒன் வகுப்புகளுக்கும் தொடங்கப்பட்டது.
மார்ச் முதல் ஊரடங்கும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளும் தொடர்வதால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த நெருக்கடியான நிலையிலும், முழுமையான கல்விக்கட்டணத்தைச் செலுத்துமாறு தனியார் பள்ளிகள் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.
மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் இருநாள்களில் 2.50 லட்சம் மாணவர்கள் சேர்ந்தனர். ஆகஸ்ட் 24ம் தேதி வரை மூன்று முதல் பிளஸ் ஒன் வகுப்பு வரை 5.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். ஆகஸ்ட் 17 முதல் 31ம் தேதி வரையில் பதினைந்து நாள்களில் 10.40 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெற்றுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.