"இதனை முதலில் செய்தாலே மாணவர்களுக்கு பெரிய உதவிதான்" - கல்வியாளர்கள் சொல்வதென்ன?

"இதனை முதலில் செய்தாலே மாணவர்களுக்கு பெரிய உதவிதான்" - கல்வியாளர்கள் சொல்வதென்ன?
"இதனை முதலில் செய்தாலே மாணவர்களுக்கு பெரிய உதவிதான்" -   கல்வியாளர்கள் சொல்வதென்ன?
Published on

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 1, 6, 9 ஆம் வகுப்பு மாணவர்களும், மற்றொரு பள்ளிக்கு மாறும் இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களும் அதே தேதியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 24 ஆம் தேதியன்று மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. 

மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளிலேயே இலவச புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப்படும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் எல்கேஜி மற்றும் முதல் வகுப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், "பள்ளிகளைத் திறக்க தற்போது சாத்தியமில்லை. கொரோனா சூழலைக் கருத்தில்கொண்டு, அனைத்துத் தரப்பினரிடமும் கருத்து கேட்டு முதல்வர் முடிவெடுப்பார்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் நிலை ஆகியன குறித்து சில கல்வியாளர்களிடம் கேட்டோம்.

பொன். தனசேகரன், கல்வியாளர்

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. பதினோராம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகளில் முடித்துவிட்டார்கள். அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு பிரச்னையாக இருந்தது. தற்போதைய அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் புதிய புத்தகங்கள் கிடைத்து மாணவர்களுக்குப் படிப்பின்மீது ஆர்வம் ஏற்படும். கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டால் மட்டுமே பள்ளிகளைத் திறக்கமுடியும். பொதுப்போக்குவரத்துத் தொடங்கப்படவேண்டும். அப்போதுதான் கிராமப்புறப் பிள்ளைகள் உள்பட அனைத்துக் குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்லமுடியும்.

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு முட்டை போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. சில பள்ளிகளில் நுண் வகுப்பறைகளைத் தொடங்கியுள்ளார்கள். சமூக இடைவெளியுடன் வாய்ப்புள்ள பகுதிகளில் வகுப்புகளை நடத்தலாம். அதற்கான வழிகாட்டு நெறிகளை அரசு வகுக்கவேண்டும்.

மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஒருவிதத்தில் பள்ளி இடைநிற்றலைத் தடுக்கும். மீண்டும் பள்ளிகள் தொடங்கப்படாமல் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சிக் கல்வி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டால், பாடத்திட்டங்களை கணிசமான அளவுக்குக் குறைக்கலாம். அல்லது பாடத்திட்டத்தை எளிமைப்படுத்தலாம்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச்செயலர், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை

பள்ளிக்கல்வித்துறையின் மாணவர் சேர்க்கை அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். சகஜமான நிலையில்கூட பள்ளிகளில் சமமான கற்றல் வாய்ப்புகள் மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஊரடங்கால் குடிபெயர்ந்தவர்கள், வேலையிழந்த தொழிலாளர் வாரிசுகளின் கல்விதான் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. அவர்கள் ஊருக்குத் திரும்பி குழந்தைகளை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கவேண்டும்.

தனியார் பள்ளிகளைப் பார்த்தே அரசுப் பள்ளிகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் பல முறை தோல்வியடைந்தவர்கள் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டுள்ளார்கள். 100 சதவீத தேர்ச்சியால் என்ன பெரிய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. பழைய பிரச்சினைகளே தொடர்கின்றன. அங்கே ஆங்கிலவழி என்றால் இங்கேயும் ஆங்கிலவழி. இந்த நிலையில், அரசின் கல்விக்கொள்கைக்கு ஏற்றவாறு நடக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

ஆன்லைன் பாடங்கள் சரிதான். ஆனால் நேரடி வகுப்பறைகளில் ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பி, சந்தேகங்களைக் கேட்டுப் பெறுகிற கல்விக்கு இணையாகமுடியாது. கொரோனா தொற்று முற்றிலுமாக கட்டுப்படும்போதுதான் நாம் பள்ளிகள் திறப்பது பற்றி யோசிக்கமுடியும். தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவது மாணவர்களுக்குத் தடைபட்டிருந்த கல்வி கிடைக்க வழியாக அமையும்.

உமா, கல்வியாளர்

மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். வேலைவாய்ப்புகளை இழந்த நிலையில் பலருக்கு மெட்ரிக் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்தமுடியவில்லை. அவர்கள் அரசுப் பள்ளிகளை நாடிவருகிறார்கள். மாணவர் சேர்க்கை முடிந்தால், நம்ம குழந்தை பள்ளியில் சேர்ந்தாச்சு என்கிற பிடிப்பு பெற்றோர்களுக்குக் கிடைக்கும். அடுத்து என்ன செய்யப்போகிறோம் பதைபதைப்பில் அவர்கள் இருந்தார்கள்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் 60 சதவீத குழந்தைகளுக்கு ஆன்லைன் வசதிகள் கிடைக்கவில்லை. ஒரு வகுப்பில் 49 மாணவர்கள் இருந்தால், அவர்களில் 23 பேர் தான் வாட்ஸ்ஆப்பில் இணையும் அளவுக்கு உள்ளார்கள். இதுதான் நடைமுறை எதார்த்தம். எப்போதும் பாதிக்கப்படுகிறவர்களாக கல்வி மறுக்கப்படும் ஏழை எளிய சமூகத்தினரே இருந்துவருகிறார்கள்.

எதிர்வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்காமல், நோய்த் தொற்று பாதிப்பில்லாத கிராமங்களில், சிறுநகரங்களில் பள்ளிகளைத் திறக்க முயற்சி செய்யலாம். அந்தந்த பகுதிகளின் சூழ்நிலைக்கேற்ப கல்வி அதிகாரிகளின் ஆலோசனைகளோடு நடவடிக்கைகளை எடுக்கலாம்.

பரமேஸ்வரி, அரசுப் பள்ளி தலைமையாசிரியை, ராணிப்பேட்டை மாவட்டம்

மாணவர் சேர்க்கை தொடங்கினால்தான், "நாங்கள் படிக்கிறோம், பள்ளியில் சேர்ந்திருக்கிறோம்" என்ற நம்பிக்கையும் உறுதியும் மாணவர்களுக்குக் கிடைக்கும். அதிக கல்விக்கட்டணத்தைச் செலுத்தமுடியாத நிலையில், பல பெற்றோர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். வாட்ஸ் ஆப், ஆன்லைன், தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆனாலும் பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளின் கல்வியை கண்காணிக்கவேண்டும். அந்த நிலை பெரும்பாலான குடும்பங்களில் இல்லை.

லேப்டாப் இருக்கிறது. தேவையான இணைய வசதி இல்லை. பல குடும்பங்களில் ஆண்ட்ராய்டு போன் வசதியில்லை. அவர்கள் என்ன செய்வார்கள். ஏதாவது ஒரு வகையில் மாணவர்களுடன் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்பை ஏற்படுத்தி, கல்வி கற்பித்துவருவது நம்பிக்கை அளிக்கிறது. புதிய புத்தகங்களும், மாணவர் சேர்க்கையும் மாணவர்களுக்கு புத்துணர்வைத் தரும்.

விஜயலட்சுமி, அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியை,  திருவண்ணாமலை மாவட்டம் 

மாணவர் சேர்க்கை அறிவிப்பை வரவேற்கிறோம். குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தால், பெற்றோர்களுக்கு நிம்மதி கிடைக்கும். ஊரடங்கு நாட்களில் மிகப்பெரிய தேவை புதிய பாடப்புத்தகங்கள்தான். புத்தகங்கள் கிடைத்தால், பக்கத்து வீட்டில் அல்லது படித்த அக்கா, அண்ணன்களிடம் கேட்டுப் படித்துக்கொள்ளமுடியும். பல இடங்களில் உள்ளூரில் வசிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை வீட்டுக்கே அழைத்து கற்பித்துவருகிறார்கள்.

எங்கள் மாணவர்களுக்கு வாட்ஸ்ஆப், கூகுள் கிளாஸ்ரூம் வழியாக பாடங்களை எடுத்துவருகிறோம். நல்ல மாற்றம் இருக்கிறது. ஆடியோ, வீடியோ மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. நேரடி வகுப்பறைகளில் பாடம் படிக்கமுடியாத ஒரேகுறைதான். மற்றபடி எல்லா வசதிகளும் ஆன்லைன் வகுப்புகளில் கிடைக்கின்றன. அதை அனைத்து மாணவர்களும் பயன்படுத்தும் அளவுக்கு குடும்பப் பொருளாதார நிலை உயரவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com