தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு நடத்த 60 சதவிதம் பேர் ஆதரவா? - கல்வியாளர்கள் கருத்து

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு நடத்த 60 சதவிதம் பேர் ஆதரவா? - கல்வியாளர்கள் கருத்து
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு நடத்த 60 சதவிதம் பேர் ஆதரவா? - கல்வியாளர்கள் கருத்து
Published on

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச்செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் என அனைவரின் கருத்தைக் கேட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. பெற்றோர், மாணவர்களிடம் இரண்டாவது நாளாக இன்றும் கருத்து கேட்கப்படுகிறது. தனித்த மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் வழியாக திரட்டிய கருத்துகளையும் கருத்தில் கொண்டு இன்றைய ஆலோசனையின் போது முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படுமா? என்பது குறித்த அறிவிப்பினை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறையின் 360 டிகிரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கல்வியாளர் காயத்ரி கூறுகையில், "கல்வியாளர்கள், பெற்றோர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை விட மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதே முக்கியம். ஏனென்றால் மூன்றாவது அலை வரும் என தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. எப்போதுமே மாணவர்களின் நலன் தான் முக்கியம் என்று நான் நினைப்பேன். கடந்த அலையின் போது பத்தாம் வகுப்பு தேர்வுக்கு கருத்து கேட்டபோது நான் தேர்வு வேண்டும் என பேசினேன். அப்போது கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் மிக மிக குறைவாக இருந்தது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் அப்படி அல்ல.

தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது என்று சொல்கிறீர்கள். ஆனால் மூன்றாவது அலையில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் சொல்கின்றனர். அப்படி இருக்கக் கூடிய நிலையில் மாணவர்களின் நலன் மிகவும் முக்கியம். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மாணவர்களின் கேரியரில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் அதற்கு மாற்றாக வேறு வழி இருக்கிறதா என ஆராய்ந்து, அவ்வாறு இருந்தால் அதை ஏற்றுக் கொள்வதில் எவ்வித தயக்கமும் கூடாது. மாணவர்கள் பெரும்பாலோனோர் தேர்வுகளை கண்டு அச்சப்படுகின்றனர். அவர்களுக்கு ஆறு தேர்வுகள் இருக்கிறது. அதற்காக மாணவர்களை ஒன்றிணைக்கும் போது ஏதேனும் விளைவு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது. மாணவர்களின் விருப்பத்திற்கே தேர்வுகள் வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

இதுகுறித்து கல்வியாளர் ஆயிஷா நடராஜன் பேசுகையில் "பத்தாம் வகுப்பு போன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது எளிது. ஏனென்றால் அவர்கள் கேட்ட குருப் பன்னிரண்டாம் வகுப்பில் கிடைக்கும். ஆனால் 12ஆம் வகுப்பு தேர்வுகளை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. மத்திய அரசு மாநில அரசுகளின் அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தியபோது 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய அரசும் மாணவர்களின் நலன் முக்கியம் என்று கூறி வருகிறது. ஆனால் நுழைவுத்தேர்வை ரத்து செய்யவில்லை. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மட்டும் தேவையில்லை. ஆனால் நுழைவுத்தேர்வு தேவை எனக் கூறுவது எந்த வகையில் சாத்தியம். பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் சேர்ந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். அதாவது கல்லூரிகளுக்கு எந்த வகையில் மாணவர் சேர்க்கை இருக்கப்போகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு வேண்டாம் என்றால் நுழைவுத்தேர்வு எங்களுக்கு வேண்டாம். அப்படி இல்லை என்றால் ஓபன் புக் தேர்வாக இருந்தாலும் பரவாயில்லை தேர்வுகளை நடத்தி கொள்ளலாம்." என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com