பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. மீண்டும் பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனைகள் நடைபெற்ற நிலையில், நவம்பர் 16-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு, அனைத்துக் கல்லூரிகள், கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதனிடையே, நவம்பர் 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன. கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பதில் அவசரம் ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை வருகிற 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார். பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.