கல்வி
“இதையெல்லாம் நிச்சயம் செய்யுங்கள்”-பள்ளிகளுக்கு மழைக்கால பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு
“இதையெல்லாம் நிச்சயம் செய்யுங்கள்”-பள்ளிகளுக்கு மழைக்கால பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு
பள்ளிகள், மாணவர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கொரொனா பொதுமுடக்கத்தால் ஆன்லைனிலேயே கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகளுக்கான வகுப்புகள் நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது பெய்துவரும் பருவமழை காரணமாக பல்வேறு இடங்களிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு நிகழும் அசம்பாவிதங்களை தவிர்த்து அவர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதில்,
- பள்ளிகளில் மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகள், சுற்றுச்சுவர்களை மாணவர்கள் பயன்படுத்தாதவாறு உறுதி செய்ய வேண்டும்
- முறிந்து விழும் நிலையில் உள்ள மரக்கிளைகள், மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்
- மின் இணைப்புகள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
- திறந்த நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகள், கிணறுகளின் அருகில் மாணவர்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்
- விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு செல்வதைத் தவிர்க்கும் பொருட்டு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
- பள்ளிக்கு வரும்போதும், பள்ளி முடிந்து செல்லும்போதும் அறுந்துகிடக்கும் மின் கம்பிகள், வெள்ளநீர் ஓடும் கால்வாய், ஆறுகளை மாணவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்
- பள்ளி வளாகத்துக்குள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்
என அனைத்துவகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.