தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அக்டோபர் மாதம் சுழற்சி முறையில் 9 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
முதல்கட்டமாக சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், அதற்கேற்ப பாட அளவைக் குறைக்கவும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது பாடத்திட்டத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை குறைக்க வாய்ப்பிருக்கிறது.
பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடந்துவருகின்றன. அரசுப் பள்ளிகளில் வசதிக்கேற்ப வாட்ஸ்அப், யூ டியூப், நுண் வகுப்பறைகள், கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. தற்போது பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் உள்ளிட்ட பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்ந்து பரிந்துரை வழங்க பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் 16 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் முதல்கட்ட பரிந்துரை அறிக்கை முதல்வர் பழனிசாமியிடம் ஜூலை 14ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. அடுத்ததட்ட அறிக்கையையும் நிபுணர் குழு சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
" கல்வி ஆண்டு தாமதத்தால் அனைத்துப் பாடங்களையும் நடத்துவதற்கான கால அவகாசம் இல்லை. எனவே, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு முப்பது சதவீதமும், மற்ற வகுப்புகளுக்கு சூழலுக்கு ஏற்ப 40 சதவீதமும் பாட அளவைக் குறைக்கவேண்டும். மேலும், மாணவர்களுக்கு சிரமங்களைத் தவிர்க்க திருப்புதல் தேர்வுகளை மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன" என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.