10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுமுடக்க காலத்தில் வீட்டில் இருந்தே பாடங்களை படிக்க வசதியாக அடுத்த வாரம் முதல் அரசு பள்ளிகளில் பாட புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததால் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா அச்சுறுத்தல் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்புக்கு தற்போது வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுமுடக்க காலத்தில் வீட்டில் இருந்தே பாடங்களை படிக்க வசதியாக அடுத்த வாரம் முதல் அரசு பள்ளிகளில் பாட புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்டார். அவை,
1.பாடப்புத்தகம் வழங்கும் நாள், நேரம் தொடர்பாக பெற்றோர்களுக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும்
2. ஒரு மணி நேரத்தில் 20-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே புத்தகம் வழங்க வேண்டும்
3. நீண்ட வரிசையில் நிற்க வைத்து புத்தகம் விநியோகம் செய்யக்கூடாது
4. கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள மாணவர்களை புத்தகம் வாங்க வரவழைக்க கூடாது
5.தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது