1,400 க்கும் அதிகமான மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதற்கு மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த அதர்வ் என்ற மருத்துவர், தனக்கு ஒதுக்கப்பட இடத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற கோடைகால சிறப்பு அமர்வு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 1,456 மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி, மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டிக்கு தனது கண்டனங்களை தெரிவித்தார்.
மேலும் `தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவர்களுக்கான இடங்கள் உரிய முறையில் ஒதுக்கித் தரப்படவில்லை என்றால் நீதிமன்றமே அதனை செய்ய நேரிடும். அதனால் ஏற்படும் இழப்பீட்டை வழங்கவும் உத்தரவிட நேரிடும்’ எனவும் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இவ்வளவு காலியிடங்கள் இருந்திருக்கிறது என தெரிந்தும் அதனை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அவர்கள்தான் எடுக்கவில்லை என்றும் கடுமையாக கூறினார். குறிப்பாக, `ஒரு மருத்துவ இடம் கூட காலியாக இருக்காமல் பார்த்துக் கொள்வது உங்களது வேலைதான்’ என அடுத்தடுத்து கடுமையாக கூறினார்.
தொடர்ந்து “தற்பொழுது நாட்டிற்கு அதிக அளவில் மருத்துவர்களும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகளை படித்த நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களும் தேவைப்படுகின்றனர். ஆனால் உங்களுடைய இந்த பொறுப்பில்லாத செயல்பாடுகளால் எவ்வளவு மாணவர்களும் பெற்றோர்களும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று தெரியுமா?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.