அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு இனிமேலாவது நிறைவேறுமா?

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு இனிமேலாவது நிறைவேறுமா?
அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு இனிமேலாவது நிறைவேறுமா?
Published on

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத அளவுக்கு உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நீட் தேர்வு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்கள் வாய்ப்புகளைத் தவறவிட்ட நிலையில், அரசின் அறிவிப்பு பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. அந்த அறிவிப்பை கல்வியாளர்களும் அரசியல் கட்சியினரும் வரவேற்கின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 14 ஆம் தேதியன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பின் மூலம் சுமார் 500 மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றிப் பேசிய கல்வியாளர் பேராசிரியர் கல்யாணி, “முதலில் அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். நீட் தேர்வின் மூலம் ஒரு சதவீதம் அளவுக்கும் குறைவான அரசுப் பள்ளி மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேரும் நிலை இருந்தது. அரசின் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு காரணமாக அந்த எண்ணிக்கை உயரும் என்பது உற்சாகம் தருகிறது. ஆனாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கலாம். அதேபோல அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் கொடுக்கலாம். எதார்த்தத்தில் இந்த ஒதுக்கீடும் இல்லையென்றால், ஒரு அரசுப் பள்ளி மாணவரும் கூட மருத்துவம் படிக்க முடியாத நிலைதான் ஏற்படும்” என்றார்.



மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வந்தது. இதுதொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் மார்ச் 21 ஆம் தேதி நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

பல கல்வியாளர்களுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு நிபுணர் குழு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான அறிக்கையை முதல்வரிடம் வழங்கியது. அதைத்தொடர்ந்து நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.அனைவருக்குமான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.


தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின்கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 3,350 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி கிடைத்துள்ள நிலையில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1,408 தமிழக மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும்.

தற்போது அரசு வழங்கியுள்ள உள் ஒதுக்கீடு காரணமாக, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேரும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, “மருத்துவப் படிப்புகளில் இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கையை தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருக்கவேண்டும். அதனை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். 7.5 சதவீத இடஒதுக்கீடு அளித்திருப்பது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் இது முழுமையான தீர்வல்ல” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com