டிவி செய்திகள் போல வாசிப்புப் பயிற்சி: புதுமை செய்யும் அரசுப் பள்ளி ஆசிரியர்

டிவி செய்திகள் போல வாசிப்புப் பயிற்சி: புதுமை செய்யும் அரசுப் பள்ளி ஆசிரியர்
டிவி செய்திகள் போல வாசிப்புப் பயிற்சி: புதுமை செய்யும் அரசுப் பள்ளி ஆசிரியர்
Published on

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியம் காத்தநேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் விஜயராம், டிவி செய்திகள் போல பயிற்சியளித்து  மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்திவருகிறார்.

தினமும் நான்கைந்து செய்திகளைத் தேர்ந்தெடுத்து வாசித்து, அதற்கான வீடியோவை வாட்ஸ்ஆப் மூலம் மாணவர்களுக்கு அனுப்பிவைப்பார் இந்த ஆசிரியர். பின்னர் அதைப் பார்த்து வாசித்துப் பழகும் அவர்கள், அடுத்து செல்போனில் செய்திகளை வாசிக்கும் வீடியோவை அனுப்பிவைக்கிறார்கள். அதில் பிழைகளைக் கண்டறிந்து வாசிப்புத் திறனை செம்மைப்படுத்துகிறார் ஆசிரியர் விஜயராம்.

"டிவிக்களில் செய்தி வாசிக்கும்போது இடைவெளி விடாமல் சீராக வாசிப்பார்கள். அதை மாணவர்களை கவனிக்கச் சொல்வேன். அதை கவனித்து அவர்களும் செய்தி வாசிப்பார்கள். இந்தப் பயிற்சியின் காரணமாக பிழையின்றி பாடங்களையும் வாசிக்கும் திறனைப் பெற்றார்கள். அவர்களுடைய குரலை ஸ்பீக்கரில் போட்டுக் காட்டுவேன். வித்தியாசமாக இருக்கும். தங்கள் குரலைக் கேட்டு ஆச்சரியப்படுவார்கள். அந்த ஆச்சரியம்தான் அவர்களுக்கான வாசிப்புத்திறனை வெகுவாக வளர்த்துள்ளது" என்கிறார் ஆசிரியர் விஜயராம்.

செய்தி வாசிக்கும் மாணவர் 

புதுக்குளம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில்தான் முதன்முதலில் டிவி செய்திகள் வாசிப்பைப் போல வாசிப்புத் திறன் பயிற்சி அளித்திருக்கிறார் அவர். பின்னர் வேறு பள்ளிக்கு மாறியதும், பயிற்சி தொடங்கும் நேரத்தில் ஊரடங்கு வந்துவிட்டது.

ஆசிரியர் வெ. விஜயராம் 

"கல்லூரியில் படிக்கும் காலத்தில் எனக்கு ஆர்ஜேவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. பல வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். அந்த அனுபவத்தின் வாயிலாக, என் மாணவர்களுக்கும் செய்தி வாசிப்பைக் கற்றுக்கொடுக்கிறேன். அதன் மூலம் மாணவர்கள் அனைவரும் தயக்கமின்றி தெள்ளத்தெளிவாக பாடங்களை வாசிக்கிறார்கள். நான் பணிபுரியும் பள்ளிகளில் எல்லாம் இந்த மாற்றங்களைச் செய்துவருகிறேன்" என்கிறார் உற்சாகத்துடன் விஜயராம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com