புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள கோனப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எஸ். அபிராமி. இவர் தனது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 366 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடிக்கவில்லை என்றாலும் இவர் தேர்வு எழுதிய சூழ்நிலை அவ்வளவு சாதாரணமல்ல.
அபிராமியின் தந்தை மலேசியாவில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு, திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயம்பட்டதாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் தகவல் வந்திருக்கிறது. போதிய பண வசதி இல்லாததால் உடலை இந்தியாவிற்கு கொண்டுவந்து கடைசியாகக் கூட அவரை பார்க்க முடியவில்லை.
‘’எனக்கு மூன்று மகள்கள். அபிராமிதான் மூத்தவள். சில வருடங்களுக்கு முன்பு எனது கணவர் வேலைநிமித்தமாக மலேசியா சென்றுவிட்டார். அங்கு வெறும் 15 ஆயிரத்திற்கு வேலை செய்தார். அதில் 10 ஆயிரம் வீட்டிற்கு அனுப்பி வைப்பார். என் கணவருக்கு விபத்து ஏற்பட்டிருப்பதாகவும், அவரை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் அவரது மேனேஜர் எங்களுக்குத் தெரிவித்தார். அவரது சிகிச்சைக்காக நான் ரூ. 3 லட்சம் கடன் வாங்கினேன். ஆனால் அதில் பாதி பணத்தை மலேசியாவில் என் கணவரின் நண்பர் என்று கூறி ஒருவர் கையாடல் செய்துவிட்டார். ஆனால் இதையெல்லாம் தாண்டி என் கணவர் பிழைக்கவில்லை’’ என்கிறார் அபிராமியின் தாயார் மேனகா.