“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
தமிழக அரசின் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை சார்பில் அங்கு 14,359 மாணவர்கள் இந்த வருடம் பிளஸ் 2 தேர்வை எழுதினார்கள். புதுச்சேரியில் மொத்தம் 129 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகளை தமிழக அரசு இன்று வெளியிட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகளை முதல்வர் ரங்கசாமி இன்று அவரது அலுவலகத்தில் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், “இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 92.67% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3.6 சதவீதம் குறைவு. அரசுப் பள்ளிகளை பொருத்தவரை 85.38 சதவீதம் தேர்ச்சி உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 56 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதிகப்படியாக வணிகவியல் பாடத்தில் 157 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் மொழியில் யாரும் 100-க்கு 100 மதிப்பெண் வாங்கவில்லை.
நீட்தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுவதற்காக கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். புதுச்சேரி மாநிலத்தில் வரும் கல்வியாண்டில் 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் கொண்டு வரப்படும். சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் விருப்ப மொழியாக தமிழ் மொழிப்பாடம் இடம் பெறும்.
வரும் கல்வியாண்டின் துவக்கத்திலே மாணவர்களுக்கான பாடப் புத்தகம், இலவச நோட்டு புத்தகங்கள், சீருடைகள் மற்றும் மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி ஆகியவை வழங்கப்படும்” என்றார்.
வழக்கமாக தமிழக அரசு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிவித்த பின்பு தான் புதுச்சேரி மாநில அரசும் தங்கள் மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அதுவே இந்த வருடமும் நடந்தது. ஆனால் இந்த வருடம் இதில் சில சிக்கல்கள் ஏற்பட்டது.
அறிவிப்பின்படி, இன்று தமிழக அரசு காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவை வெளியிடுவதுதான் திட்டம். ஆனால் அமைச்சர் அன்பில் மகேஷ் வர தாமதமானதால் தேர்வு முடிவு வெளியீடும் தாமதமானது. அதேநேரம் தமிழக அரசு குறித்துக்கொடுத்த காலை 9.30 மணி என்ற நேரத்துக்கு, புதுச்சேரி தேர்வு முடிவுகளையும் வெளியிட வேண்டுமென தனது அலுவலகத்திற்கு முன்கூட்டியே (காலை 9.20 மணிக்கெல்லாம்) வந்துவிட்டார் முதலமைச்சர் ரங்கசாமி. எதிர்பாராவிதமாக தமிழக அரசு தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் ஆனதால், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் 40 நிமிடங்கள் காத்திருந்து தமிழக தேர்வு முடிவுகள் வெளியான அதே நேரத்தில் புதுச்சேரி மாநில தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.