தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலின் மத்தியில் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு மத்திய அரசு சிபிஎஸ்இ +2 தேர்வை ரத்து செய்ததையடுத்து குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் +2 பொதுத்தேர்வை ரத்துசெய்தன. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தமிழக அரசும் +2 பொதுத்தேர்வை ரத்து செய்தது. மேலும் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது குறித்து குழு அமைத்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழக பாடத்திட்டத்தையே பின்பற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் +2 பொதுத்தேர்வு நடைபெறாது என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் மதிப்பெண் வழங்கப்படும் அடிப்படையிலேயே புதுச்சேரியிலும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.