தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி நடக்கிறது.
இந்தி பேசாத மாநிலங்களில் அம்மாநில மொழிகளில் தபால்தேர்வு நடைபெறும் என தபால்துறை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் தமிழ் மொழியில் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஜூலை 14-ஆம் தேதி நாடு முழுவதும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆங்கிலம், இந்தியில் தேர்வு நடைபெற்றதற்கு தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தபால் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து தமிழக எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். அப்போது, தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்தார். அத்துடன், கடந்த ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்ற தபால்துறை தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.