(கோப்பு புகைப்படம்)
திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
10 மற்றும் 12 வகுப்புகளின் திருப்புதல் தேர்வுக்கான, 10 வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியாகின. இதுபற்றி அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர் பொன் குமார், திருவண்ணாமலையில் நேரடியாக விசாரணை நடத்தினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 பள்ளிகள் வினாத்தாள்களை கசியவிட்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி விளக்கம் கேட்டு அந்தப் பள்ளிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள ஆக்ஸிலியம் மெட்ரிக் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், ஊழியர்கள் என 4 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் அளித்த புகாரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.