பிளஸ் 2 தமிழ் பாடத்தேர்வு மிக எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவ மாணவிகள் இந்த பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். இதற்காக 3225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று மொழிப் பாடம் தமிழ் தேர்வு நடைபெற்று. தேர்வு தொடங்கியபோது முதலில் 10 மணி முதல் 10.15 வரை வினாத்தாளை படிக்கவும், விடைத்தாள் முதல் பக்க விவரங்கள் சரிபார்க்கவும் நேரம் வழங்கப்பட்டது. பின்னர் காலை 10:15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெற்றது.
இன்று நடைபெற்ற தமிழ் பாடத் தேர்வு மிக எளிமையாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண்கள் இந்த பாடத்தில் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர். சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு முடித்து வெளியே வந்த மாணவிகள் பிளஸ் 2 தமிழ் பாட தேர்வு எதிர்பார்த்த கேள்விகள் பாடப் புத்தகத்தின் பின்னால் வந்த கேள்விகள் அதிக அளவில் வந்ததாக தெரிவித்தனர். வினாத்தாள் எளிமையாக இருந்ததால் எளிதாக இந்த தேர்வை அணுக முடிந்ததாக தெரிவித்தனர்.
தேர்வுக்கான நேரம் போதுமானதாக இருந்ததாகவும், 90% கேள்விகள் பாடப்புத்தகத்தின் பின்புறம் இருந்த கேள்விகளாக இடம் பெற்றது எளிமையாக இருந்ததாகவும், 10 சதவீத கேள்விகள் பாட புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர். குறிப்பாக ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் நெடு வினாக்கள் உள்ளிட்ட மற்ற வினாக்கள் மீண்டும் மீண்டும் படித்த, ஏற்கனவே தயாராகி இருந்த வினாக்களாக இடம் பெற்றிருந்தது. இது தேர்வை திட்டமிட்டபடி எழுத வாய்ப்பாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.