பள்ளிகளை திறக்கலாமா? - ஜனவரி 8ம் தேதி வரை பெற்றோரிடம் கருத்து கேட்பு

பள்ளிகளை திறக்கலாமா? - ஜனவரி 8ம் தேதி வரை பெற்றோரிடம் கருத்து கேட்பு
பள்ளிகளை திறக்கலாமா? - ஜனவரி 8ம் தேதி வரை பெற்றோரிடம் கருத்து கேட்பு
Published on

பள்ளிகள் திறப்பது குறித்து 10,12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்று முதல் ஜனவரி 8ஆம் தேதிவரை கருத்து கேட்பு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வது இன்றியமையாதது. பள்ளிகள் திறப்பது குறித்து 10,12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்று முதல் ஜனவரி 8ஆம் தேதிவரை கருத்து கேட்பு நடைபெறும். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பெற்றோரை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்க வேண்டும். பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் பள்ளிகளின் வசதிக்கேற்ப கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். பெற்றோரிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களை முதன்மை கல்வி அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும். அறிக்கையை தொகுத்து பள்ளி கல்வி இயக்ககத்திற்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில், பொங்கல் பரிசை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "பொங்கல் பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்பு விடுமுறை குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். பள்ளிகளில் நடத்தபடும் செய்முறை தேர்வுகள் அனைத்தும் நடைபெறும். அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும். பள்ளி திறந்தவுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்க பெற்றோர், மாணவர்களிடம் கருத்து கேட்பு இன்று முதல் தொடங்கி இந்த வாரம் இறுதி வரை நடைபெறும். கருத்துக் கேட்டகப்பட்ட பின், பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார்" என்றார்.

20 சதவிகித அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாதது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், "கூடுதலாக மாணவர்கள் வருகின்றபோதுதான் பற்றாக்குறை ஏற்படும். தற்போது குறைந்தளவு வகுப்பறைகள் திறக்க மட்டுமே முதல்வர் முடிவுகள் மேற்கொள்ள இருக்கிறார். அனைத்து வகுப்பறைகளும் திறக்கும்போது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார். கல்விக்கடன் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு, "தேர்தல் வருகின்றபோதுதான் தெரியும்" என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com