மத்திய பல்கலைக் கழகங்களில் 10,000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் - மத்திய அரசு
மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. அதில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் தொடர்பாக ம.தி.மு.க. எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு அமைச்சர்களிடம் துறை சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன, அதற்கு உரிய பதிலை மத்திய அரசு அளித்து வருகிறது. அந்த வகையில் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்து ம.தி.மு.க. எம்.பி வைகோ கேள்வி எழுப்பியிருந்தார், அதற்கு கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், மத்திய பல்கலைக்கழகங்களில் 6,535 முழு நேர ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 20 ஐ.ஐ.எம்.களில் 403, 23 ஐ.ஐ.டி.களில் 3,876 இடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும் மிக மோசமான சூழல் நிலவுவதாக தெரியவந்துள்ளது. அதாவது, எஸ்.சி ஆசிரியர்கள் 1,015, எஸ்.டி ஆசிரியர்கள் 590, ஓபிசி ஆசிரியர்கள் 1,767 இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. அதில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் மட்டும் எஸ்.டி 32, எஸ்.சி 183, ஓ.பி.சி.462 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதேபோல் ஐஐஎம்-களில் எஸ்.டி 5, எஸ்.சி 27, ஓபிசி 45 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக மத்திய பல்கலைகழகங்களில் 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சட்டத்தின் படி, கல்வி நிறுவனங்களில் எஸ்.டி பிரிவினருக்கு 7.5 சதவீதமும், எஸ்.சி பிரிவினருக்கு 15 சதவீதமும், ஓபிசிக்கு 27 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த இட ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு முழுமையாக செயல்படுத்தி வருகிறதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அனைத்து ஐஐடி-கள், ஐஐஎம்-கள், மத்திய பல்கலைக்கழகங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு கல்வித்துறை அமைச்சகம் சார்பில் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், வரும் செப்டம்பர் 4, 2022க்குள் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவுகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை உயர்கல்வி நிறுவனங்கள் வேகமாக மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
- விக்னேஷ் முத்து