கிராமிய வங்கிகளில் அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளில் சேர விரும்புபவர்களுக்கு வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் பொது எழுத்துத் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பல்லவன் கிராமிய வங்கி, பாண்டியன் கிராமிய வங்கி மற்றும் புதுவை பாரதியார் கிராமிய வங்கி ஆகிய வங்கிகளில் அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணி இடங்களில் சேர விரும்புபவர்கள் இந்த எழுத்துத் தேர்வை எழுத வேண்டும். அதிகாரி (ஸ்கேல்-1) மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளில் சேர விரும்புபவர்கள் ஏதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியில் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவு இருப்பது நல்லது. இந்த ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 28 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அதாவது 2.6.1990-க்கு முன்னதாகவோ அல்லது 1.6.2000-க்கு பிறகோ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இதேபோல முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் விலக்கு உண்டு. தகுதி உள்ளிட்ட விவரங்களை இணைய தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் தேர்வு எப்படி நடைபெறும்?
ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தத் தேர்வில் Preliminary examination மற்றும் Main examination என இரண்டு தேர்வுகள் உள்ளன. அலுவலக உதவியாளர் பணிக்கு ரீசனிங், நூமரிக்கல் எபிலிட்டி ஆகியவை குறித்து 80 கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு 45 நிமிடங்கள் வழங்கப்படும். அதிகாரி (ஸ்கேல்-1) பணிக்கு ரீசனிங், ஆப்டிட்யூட் ஆகியவை குறித்து 80 கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு 45 நிமிடங்கள் வழங்கப்படும்.
இத்தேர்வில் தேர்ச்சியானவர்களை அடுத்த கட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அலுவலக உதவியாளர் பணிக்கு மெயின் தேர்வில் ரீசனிங், இங்கிலீஷ் லாங்குவேஜ், நூமரிக்கல் எபிலிட்டி, ஜெனரல் அவேர்னஸ், கம்ப்யூட்டர் அறிவு ஆகியவை குறித்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அதேபோன்று அதிகாரி (ஸ்கேல்-1) பணிக்கு மெயின் தேர்வில் ரீசனிங், இங்கிலீஷ் லாங்குவேஜ், ஆப்டிட்யூட், ஜெனரல் அவேர்னஸ், கம்ப்யூட்டர் அறிவு ஆகியவை குறித்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் 40 மதிப்பெண்கள் உள்ளன. இத்தேர்வுக்கு இரண்டு மணி நேரம் வழங்கப்படும். ஆங்கில மொழிக்கான கேள்விகள் தவிர, மற்ற பிரிவுகளுக்கான கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கேட்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, வேலூர், புதுச்சேரி, பெங்களூர் ஆகிய இடங்களில் இத்தேர்வை எழுதலாம். Preliminary தேர்வு முடிவை அக்டோபர் மாதத்திற்குள் வெளியிடப்பட்டு தகுதியானவர்களை அடுத்தகட்ட மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வை எழுதுவதற்கான இடங்களை, பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தேர்வு மையத்தில் மட்டுமே மாணவர்கள் தேர்வு எழுத முடியும். தேர்வு மையத்தை மாற்றுவதற்கு அனுமதி கிடையாது.
மெயின் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வுக்கும், நேர்முகத் தேர்வுக்கும் 80:20 என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தகுதியுடைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
www.ibps.in என்கிற இணையதளத்திற்குச் சென்று சரியான இ-மெயில் முகவரி மற்றும் மொபைல் நம்பரை கொடுத்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும் முன் புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100/-, மற்ற பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.600/-. அத்துடன், வங்கிகளில் சேவைக் கட்டணத்தையும் மாணவர்கள் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு/ நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம். விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கான முறைகள் குறித்து இணையதளத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் கட்டணங்களை செலுத்த கடைசி தேதி: 2.7.2018
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 2.7.2018