மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அரசு மருத்துவ இடங்கள் அதிகம் இருந்தும், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு மூன்று இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. இதனால், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான மருத்துவ கனவு கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.
விளையாட்டுத்திறன் மூலம் மாநிலத்திற்கும், பல சமயங்களில் தேசத்திற்கும் பெருமை சேர்ப்பவர்கள் விளையாட்டு வீரர், வீராங்கனைகள். அப்படி விளையாட்டு பிரிவில் பிரகாசிக்கும் வீரர் வீராங்கனைகள், உயர்கல்விக்காக மருத்துவத்தை நாடும்போது தமிழகத்தில் அவர்களுக்கான இடம் மிகக் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
விளையாட்டில் கவனம் செலுத்தி, நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தும் மூன்று இடங்கள் மட்டுமே உள்ளதால் மருத்துவ இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் தமிழகத்திற்கு பல பதக்கங்களை பெற்று தந்த வீராங்கனையான பிரியா. மாநில அரசு தங்களுக்கான இடத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் இவர் கோரிக்கை விடுக்கிறார். அரசின் நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருப்பதாக விளையாட்டு வீராங்கனைகளின் பெற்றோரும் கூறுகிறார்கள்.
மற்ற படிப்புகளை போல மருத்துவ படிப்புகளிலும் விளையாட்டு பிரிவிற்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசு உடனடியாக சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.