சிறு, குறு நடுத்தரத் தொழில் துறைகளில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் மூன்றரை லட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாகியுள்ளதாக தொழிற்கூட்டமைப்பான சிஐஐயின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தொழிற் கூட்டமைப்பான சிஐஐ நிறுவனம் வேலைவாய்ப்பு தொடர்பான ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்திவருகிறது. அந்தவகையில் சிறு,குறு தொழில்களால் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வு சுமார் ஒரு லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி கடந்த 4 ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைகளில் 13.9 சதவிகிதமே வளர்ச்சி கண்டிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது முந்தைய 4 ஆண்டுகளில் இத்துறையில் 3.32 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ளது. அத்துடன் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டும்தான் அதிகளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுள்ளன. அதாவது இந்த மாநிலங்களில் 50% மேலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் 73% வேலைவாய்ப்புகள் குறு தொழில்களில் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த வேலைவாய்ப்புகள் சுற்றுலா (12%), ஜவுளி(8%), போக்குவரத்து (7%) ஆகிய துறைகளில் உருவாகியுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆய்வில் வரும் ஆண்டில் 5.70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.