பள்ளிகள் திறப்பு: ஆன்லைன் கல்வி வளங்களைப் பயன்படுத்த சில டிப்ஸ்

பள்ளிகள் திறப்பு: ஆன்லைன் கல்வி வளங்களைப் பயன்படுத்த சில டிப்ஸ்
பள்ளிகள் திறப்பு: ஆன்லைன் கல்வி வளங்களைப் பயன்படுத்த  சில டிப்ஸ்
Published on

தமிழகத்தில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், உயர்நிலை வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த ஆலோசனை நடந்துவருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டால் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்பறைகளில் பாடங்களை எப்படி நடத்துவது பற்றி பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் ஆலோசனை செய்யவேண்டியிருக்கும். இனிவரும் காலங்களில் ஆன்லைன் கற்றல் வளங்களைப் பயன்படுத்துவது பற்றிய வழிமுறைகளை ஐபிஎம் இந்தியா நிறுவனத்தின் (கற்றல் மற்றும் மேம்பாடு) இணை மேலாளர் கார்குழலி, புதிய தலைமுறை இணையதளத்துக்காகப் பகிர்ந்துகொண்டார்...

ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகளில் எல்லா மாணவர்களாலும் மனம் குவித்துப் பாடங்களை உள்வாங்கிக்கொள்ளமுடியாத நிலையில், பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்வது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை. இந்தக் கொரோனா காலத்தில் எத்தனை மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்ற அழுத்தத்துடன், பள்ளி தொலைவில் இருந்தால் வீட்டில் இருந்து சென்றுவரத் தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பும் பெற்றோர்களுக்குச் சேர்ந்துவிடும்.

மாணவர்கள் பாடங்களை முதலில் வீட்டில் பார்த்துவிட்டுச் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள மட்டுமே பள்ளிக்கு வருவார்கள். இதற்கு முதலில் ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புக்கான பாடங்களை வீடியோவாகப் பதிவு செய்யவேண்டும். எதிரே யாரும் இல்லாமல் வெறும் காமிரா முன் நின்று பாடம் நடத்துவது சிரமமான விஷயம் என்பது தனிக்கதை. பின் அந்த வீடியோவைப் பள்ளியின் இணையதளத்திலோ அல்லது அவர்கள் பயன்படுத்தும் செயலியின் இணையதளத்திலோ பதிவேற்றம் செய்யவேண்டும்.

ஆன்லைன் வகுப்பு நடக்கும்போது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நடந்த சிறு உரையாடல்களும் கேள்வி பதில் நேரமும் அவர்களை ஒன்றாகப் பிணைத்திருந்தது. அது கொஞ்சம் சுவாரசியம் கூட்டியது. மாணவர்களும் உடனுக்குடன் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள முடிந்தது. இருதரப்பினரும் இந்த வழிமுறைக்குப் பழகிவிட்டிருந்த நேரத்தில் பள்ளிக்கு வருவது பற்றிய ஆலோசனை நடக்கிறது.

கார்குழலி 

இப்போது ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்துள்ள வீடியோவை எந்தெந்த மாணவர்கள் பார்த்தார்கள் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். கூடவே பள்ளிக்கு வரும் மாணவர்களுடன் நேரத்தைப் பயனுள்ள வழியில் செலவிடத் திட்டமிட வேண்டும். எல்லா மாணவர்களும் ஒரே நாளிலோ நேரத்திலோ பள்ளிக்கு வர அனுமதியிருக்காது. ஒரு நாளின் வெவ்வேறு நேரத்தில் வரும் மாணவர்களுக்கு ஒரே பாடத்தின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த வேண்டிவரலாம். இப்படிப் பல சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டிய நேரத்தில் என்ன செய்யலாம்?

முதலில் ஆசிரியர் பதிவுசெய்த வீடியோவுடன் வேறு என்னவிதமான கூடுதல் பாடங்களைப் படித்தால் முக்கியமான கான்சப்ட்ஸ் புரியும் என்பதையும் அந்த இணையதளத்துக்கான லிங்க்கையும் சேர்த்தே மாணவர்களுக்குத் தரலாம். அவற்றை அனைத்து மாணவர்களும் பார்த்து முடிப்பதற்கென ஒரு நாளில் சில மணி நேரத்தை ஒதுக்கி நேர அட்டவணை ஒன்றைத் தயார் செய்யலாம். அடுத்ததாக, ஆன்லைன் பாடங்களை மாணவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? எனவே வீடியோவைப் பார்த்த சில மணி நேரங்களுக்குள் மாணவர்கள் சிறிய தேர்வு ஒன்றை எழுதச் செய்யலாம். இந்தத் தேர்வு வெறும் பயிற்சிதான் என்று மாணவர்களிடம் தெளிவுபடுத்திவிட்டால் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கலாம்.

தேர்வுக்கான கேள்விகளைப் பாடத்தின் முக்கியமான கான்சப்ட்டை சார்ந்து அமைக்கவேண்டும். அதாவது, கேள்வியின் பதிலைப் பார்த்தால் மாணவருக்குப் புரிந்த புரியாத பகுதிகளை ஆசிரியர் உணர்ந்துகொள்ளும் வகையில் இருக்கவேண்டும். தேர்வுக்கான நேரம் ஒரு மணி நேரத்துக்குள் இருப்பது நல்லது. இதன்மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் பாடத்தின் எந்தப் பகுதியில் சந்தேகம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

பள்ளிகள் திறக்கலாம் என்ற ஆணை வரும்பட்சத்தில் ஒரே மாதிரியான சந்தேகங்கள் உள்ள மாணவர்களை ஒரே நேரத்தில் பள்ளிக்கு வரவழைத்துச் சொல்லிக் கொடுக்கலாம். நிறைய பேருக்குப் புரியவில்லை என்றால், பாடத்தை திரும்பவும் ஆன்லைனிலேயே வேறு எடுத்துக்காட்டுகளைச் சொல்லி நடத்தலாம். மீண்டும் மாணவர்கள் தேர்வை எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யலாம். இதையும் தாண்டி கூடுதல் பயிற்சி தேவைப்படும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும். மற்றவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களை புரிந்துகொள்ளலாம்.

கார்ட்டூன் நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா 

ஆசிரியர் பாடம் நடத்துவதோடு ஆன்லைனில் கிடைக்கும் வேறு வளங்களைச் சுட்டிக்காட்டி மாணவர்கள் அவற்றையும் பார்க்கவோ கேட்கவோ படிக்கவோ பரிந்துரை செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் கான்செப்டுகளைக் கற்றுக்கொள்ளும்போது மனதில் நன்றாகப் பதியும் வாய்ப்புகள் ஏற்படும். கற்றல் என்பது ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு வழியில் நடக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். பார்ப்பது, கேட்பது, தொடு உணர்வு, எழுதுவது என எல்லாவித கற்றல் வகைகளையும் இணைத்த முறை ஒன்றைத்தான் பள்ளிக்கல்வியில் செயல்படுத்தி வந்திருக்கிறோம். இதையே ஆன்லைன் வகுப்புகளில் எப்படிச் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

ஆசிரியர் கரும்பலகை அல்லது வெள்ளைப் பலகையில் எழுதிக் காண்பித்து விளக்குவது பார்ப்பது மற்றும் கேட்பது என்ற வகைமைகளில் வரும். கிளாஸ்ஒர்க் நோட்டு, லேப் ரெக்கார்ட், அசைன்மென்ட், தேர்வு ஆகியவை எழுதுவது என்ற வகைமையில் வரும். இந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் அறிவியல் ஆய்வகத்திற்குச் சென்று பரிசோதனைகளைச் செய்துபார்ப்பதோடு ஆய்வகத்தில் ஆசிரியர் இந்தச் செய்முறைகளைச் செய்துகாட்டும் வீடியோக்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். கூடவே சிமுலேஷன் என்று சொல்லக்கூடிய புதிய கற்றல் முறையையும் பயன்படுத்தலாம்.

இயற்பியல் பாடத்தில் ஒரு இயந்திரத்தின் இயக்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால். அதை அனிமேஷனில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இயந்திரத்தின் ஒவ்வொரு பகுதியும் குறிக்கப்பட்டிருப்பதோடு அவற்றைப் பற்றிய முக்கியமான தகவல்களையும் மாணவர்கள் தெரிந்துகொள்ள முடியும். கூடவே, இயந்திரத்தின் பாகங்களைக் கணினியின் திரையில் இயக்கிப் பார்க்கவும் முடியும். சில அனிமேஷன்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. கட்டணம் செலுத்தினால் கிடைக்கும் பாடங்களும் இருக்கின்றன. இதற்கான செலவை தனியொருவரால் ஏற்கமுடியாது. எல்லா மாணவர்களும் பயன்பெறும் வகையில் அந்தந்த மாநில அரசுகளின் பள்ளிக்கல்வித் துறை நிதி ஒதுக்கி ஏற்பாடு செய்துகொடுக்கலாம்.

அறிவியல் ரெக்கார்டுகளில் வரைபடங்களை எளிமையாக வரைவதற்கும் சில பயிற்சிகள் இருக்கின்றன. இதையும் இந்த அனிமேஷன் வழிமுறையில் ஆசிரியரின் உதவியில்லாமல் கற்றுக்கொள்ள முடியும். தமிழ் ஆங்கிலம் போன்ற மொழிப்படங்களையும் ஆன்லைனில் கிடைக்கும் தரமான நாடகம், திரைப்படம் மூலம் கற்றுக்கொடுக்கலாம். சிலப்பதிகாரம் இராமாயணம் போன்ற காப்பியங்களும் பல ஆங்கில எழுத்தாளர்களின் வாழ்க்கையும் கதைகளும் இப்படி வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன.

வழக்கம்போல பள்ளிகள் செயல்படத் தொடங்கினாலும் ஆன்லைனில் கிடைக்கும் பல வளங்களைப் பயன்படுத்திக்கொள்வது மூலம் ஆசிரியர்களின் பாரத்தைக் கொஞ்சம் குறைக்கலாம். அவர்களது நேரத்தையும் திறனையும் தேவையான விஷயங்களில் செலுத்தலாம். கல்வித்துறை வல்லுநர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மின்வழிக் கற்றல் நிபுணர்களின் வழிகாட்டுதலோடு கொஞ்சம் திட்டமிடலும் அரசின் நிதி உதவியும் கிடைப்பது முக்கியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com