தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று (அக்டோபர் 8) தொடங்குகிறது. தற்போது சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் இணையவழி கலந்தாய்வில் கலந்துகொள்ளவேண்டும். பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் 461 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இங்குள்ள இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க 1.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1.12 லட்சம் மாணவர்கள் மட்டுமே தகுதிபெற்றனர். அதையடுத்து, நடப்பு ஆண்டுக்கான கலந்தாய்வு அக்டோபர் 1 ஆம் தேதியன்று தொடங்கியது. முதலில் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது.
பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமையான இன்று தொடங்கி அக்டோபர் 28 ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக இணையவழியில் நடக்கிறது. ஒவ்வொரு சுற்றிலும் மாணவர்கள் தங்கள் தரவரிசை அடிப்படையில் பங்கேற்கவுள்ளனர்.
முதல் சுற்றில் (தொழிற்பிரிவினர் உள்பட ) இடம்பெற்றவர்கள் இன்று முதல் அக்டோபர் 11 ஆம் தேதி வரை முன்பதிவு கட்டணத்தைச் செலுத்தவேண்டும். அடுத்த 12,13 ஆம் தேதிகளில் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளைப் பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல் அக்டோபர் 14 ஆம் தேதியன்று வெளியிடப்படும்.
இரண்டாம்கட்ட கலந்தாய்வு அக்டோபர் 12 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும். அதேபோல மூன்றாம் சுற்று, அக்டோபர் 16 முதல் 24 ஆம் தேதி வரையும், நான்காம் சுற்று, அக்டோபர் 20 முதல் 28 ஆம் தேதி வரையும் நடத்தப்படும்.