இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கான தன்னார்வலர் பணிக்கு, 450 முனைவர்கள் உட்பட மொத்தம் ஒரு லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இந்த நிலையில், தமிழக அரசு இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க தன்னார்வலர்கள் மூலம் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இத்திட்டத்தின்கீழ், மாணவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று வகுப்புகள் நடத்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம்
இந்த திட்டத்துக்காக இல்லம் தேடி கல்வி வழங்க 2 லட்சம் தன்னார்வலர்களை எதிர்பார்ப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். அவர்களுக்கு மாதம் ரூ.1000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு முனைவர் பட்டம் முடித்த 450 பேர் உட்பட மொத்தம் ஒரு லட்சம் பேர் பதிவு செய்து இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் முதுகலை பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகள் 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள்.