மத்திய அரசின் குரூப் பி மற்றும் குரூப் சி பணியிடங்களை நேர்காணல் மூலம் நிரப்பும் திட்டம், 23 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
2016 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அரசுப் பணிகளுக்கு நேர்காணல் நியமன ரத்து நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசுப் பணிகளில் நேர்காணல் முறையை ஒழித்து, தேர்வுமுறையில் ஆட்களை நியமிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
நேர்காணலில் பங்கேற்போர் குடும்பத்தினரிடம் ஏற்படும் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கமுடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் நேர்காணல் மதிப்பெண்களில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கும் நோக்கத்தில் நேர்காணல் மூலம் நடைபெறும் நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நடைமுறையை மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவந்தன. அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் அரசுப் பணிகளுக்கான நேர்காணல் நியமன முறை ரத்து செய்யப்பட்டது.