வருகின்ற 2019 - 20 ஆம் கல்வியாண்டு முதல் 3, 4, 5 & 8-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்துவதாக தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி 1,6, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தினை 2018-19 ஆம் கல்வியாண்டிலும், 2, 7 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தினை 2019-20 ஆம் கல்வியாண்டிலும், 3, 4, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தினை 2020-21 ஆம் கல்வியாண்டிலும் செயல்படுத்த ஆணை பிறப்பித்திருந்தது.
2018-19 ஆம் கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்பட்டு புதிய பாடப்புத்தகத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.
2, 7 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி ஏப்ரல் மாத இறுதியில் முடிவடைய உள்ளதாகவும், 2020-21 ஆம் கல்வியாண்டில் செயல்படுத்த வேண்டிய 3, 4, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த அனுமதி வழங்க தமிழக அரசுக்கு பிப்.2019 இல் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் கடிதம் எழுதியிருந்தார்.
அதனை தொடர்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கருத்தை தமிழக அரசு ஏற்று 3, 4, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு மாற்றம் செய்த புதிய பாடப்புத்தகங்களை வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த, அனுமதி வழங்க முடிவு செய்து அரசு முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அவர்கள் அரசாணை வெளியிட்டுள்ளார்.