விமானத்தில் சென்று ஐஐடியில் ஆய்வு மேற்கொண்ட நெல்லை அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்!

விமானத்தில் சென்று ஐஐடியில் ஆய்வு மேற்கொண்ட நெல்லை அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்!
விமானத்தில் சென்று ஐஐடியில் ஆய்வு மேற்கொண்ட நெல்லை அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்!
Published on

நெல்லை மாவட்ட ஆட்சியரின் அசத்தலான முயற்சியில், அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் விமானத்தில் சென்று ஐஐடியில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்த சிறப்பு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

பறப்பது! பூமியில் நடக்கும் அனைவருக்கும் ஒரு கனவு. விமானத்தை பாடப்புத்தகத்தில் மட்டுமே பார்த்து வியந்த நெல்லையின் கிராமப்புற அரசு பள்ளி மாணவ மாணவிகளை தனது சொந்த நிதியில் சென்னை ஐஐடி வளாகத்திற்கு இலவச சுற்றுப்பயணம் செல்ல ஏற்பாடு செய்துள்ளார் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு. +2 முடித்த மாணவ மாணவிகள் மருத்துவம் படிக்க நீட் தேர்வு எதிர்கொள்வது போல JEE ( joint entrance examination ) எனப்படும் உயர் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கான நுழைவுத்தேர்வு பயிற்சியை நெல்லை ஆட்சியர் விஷ்ணு, இந்த வருடம் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகத் தொடங்கியுள்ளார்.

JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இலவச வகுப்புகளில் சேர்வதற்கு கடந்த நவம்பர் மாதம் தேர்வு ஏற்பாடு செய்தனர். அந்த தேர்வில் 500 மாணவர்கள் பங்கேற்க, அதில் 70 பேர் தேர்வாகியுள்ளனர். அந்த 70 பேரில் இன்டர்வியூ மூலமாக 21 மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு கடந்த ஜனவரியில் இருந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி தேர்வான மாணவ-மாணவிகள் 21 பேரும், நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் அரசு பள்ளியில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் +1 மாணவ, மாணவிகள்.

நெல்லை மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பேட்டை, ஏர்வாடி, களக்காடு, கூடங்குளம், முனைஞ்சிப்பட்டி, மருதகுளம், திருக்குறுங்குடி, செட்டிகுளம் உட்பட 14 அரசு பள்ளிகளில் இருந்து 8 மாணவர்கள், 13 மாணவிகள் தேர்வாகியுள்ளனர். இந்த வருடம் ஜனவரியிலிருந்து இவர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் ஆன்லைன் மூலமாக JEE - நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ( IIT - இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் 21 மாணவ-மாணவிகளும் சென்று அங்கு நேரடியாக பல்வேறு விஷயங்களை கற்று கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்.

கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்த கல்விக்கான சுற்றுலா நடந்துள்ளது. இந்த பயணத்தில் முக்கிய அம்சமே நெல்லையில் இருந்து சென்னை செல்வதற்கான விமான பயணச்செலவை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டதுதான். தான் கற்றுக்கொள்ளப் போகும் உயர்தொழில்நுட்ப படம் எந்த அளவுக்கு உயர்ந்ததோ, அதற்காக எடுக்கும் முயற்சிகளும் உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில், மாணவ-மாணவிகளை விமானத்தில் இலவசமாக அழைத்துச்செல்ல தனது சொந்த நிதியை பயன்படுத்தியுள்ளார் ஆட்சியர் விஷ்ணு. இத்திட்டத்தில் உள்ள துணை ஒருங்கிணைப்பாளர்களான ஆசிரியர் பிரபு ரஞ்சித் எடிசன் மற்றும் சியாமளா பாய் ஆகிய இருவரும் மாணவ மாணவிகளை பத்திரமாக விமானத்தில் அழைத்துச் சென்றனர்.

முதலில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்று அங்குள்ள பேராசிரியர்கள் உடன் கலந்துரையாடினர். மேலும் பல்வேறு  ஆய்வுக்கூடங்களை நேரடியாக பார்த்து வியந்த மாணவ-மாணவிகளுக்கு அங்குள்ள பேராசிரியர்களும் மிக அற்புதமாக பாடங்களை நடத்தினர். இது மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளதாக மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கம் சென்று பல்வேறு அறிவியல் தொழில்நுட்பங்களை நேரில் பார்த்தனர்.

இதனையடுத்து தமிழக அரசின் "இல்லம் தேடி கல்வி'' திட்டத்தின் இயக்குனராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி இளம்பகவத்தை நேரில் சந்தித்து உரையாடினர். இளம்பகவத்தும் மாணவர்களிடம்  ஊக்கம் அளிக்கும் வகையில் உரையாடினார். தொடர்ந்து சென்னை அண்ணா நூலகம் சென்ற மாணவர்கள், இரண்டு நாள் பயணம் முடித்து இன்று நெல்லைக்கு ரயிலில் மாணவ மாணவிகள் பத்திரமாக வந்து சேர்ந்தனர்.

JEE நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு பல லட்சங்கள் செலவாகும் நிலையில் இலவசமாக மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள இந்த பயிற்சி, குறிப்பாக இலவச விமான பயணம், IIT பேராசிரியர்கள் உடன் கலந்துரையாடல் போன்றவை மாணவர்களுக்கு மிகுந்த ஊக்கமும் தன்னம்பிக்கையும் அளித்திருக்கிறது.

- நெல்லை நாகராஜன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com