மருத்துவம் உள்ளிட்ட தொழிற்சார் படிப்புகளுக்கு 1984ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்த நுழைவு தேர்வு 2007-ல் ரத்து செய்யப்பட்டது.
நாடு முழுவதும் நடந்து வந்த 50க்கும் மேற்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வுகளை முறைப்படுத்தும் வகையில் நீட் எனப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை இந்திய மருத்துவ கவுன்சில் 2012ஆம் ஆண்டு அறிவித்தது. முதல் நீட் தேர்வு2013ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி நடத்தப்பட்டது. 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி நீட்தேர்விற்கு எதிரான 115 மனுக்களில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வுக்கு தடை விதித்தது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி நீட் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கியது. இதனால் மே 1ஆம் தேதி நடத்தப்பட்ட AIPMT தேர்வு, முதற்கட்ட நீட் தேர்வாக அறிவிக்கப்பட்டது. 15 சதவிகித அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ இடங்கள் 2016-17 ஆண்டின் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படும் என கடந்தாண்டு மே மாதம் 24ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.
நிரந்தரமாக நீட் தேர்வை நடத்துவதற்கான சட்டம் 2016 ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. எனினும் அவசரசட்டத்தின் அடிப்படையில் 2016-17 ஆண்டு மட்டும் இரண்டாம் கட்ட நீட் தேர்வு கடந்த ஜூலை 24ஆம் தேதி நடத்தப்பட்டது. அந்தாண்டு மட்டும், அவசரசட்டத்தின் அடிப்படையில் தமிழகம் உட்பட நீட் தேர்வில் விருப்பமில்லாத மாநிலங்கள் தங்கள் விருப்ப முறையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அவசரச்சட்டம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.
தமிழகத்திற்கு நிரந்தரமாக நீட் தேர்விற்கு விலக்கு கோரப்பட்டு வரும் நிலையில், 2017-18 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு தழுவிய அளவில் மே 7ம் தேதி நடத்தப்பட்டது. நீட் தேர்வில் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படவில்லை என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தேர்வு முடிவுகளை வெளியிட மே 24ம் தேதி தடை விதித்தது. அதன்பிறகு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தடை உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால், ஜீன் 23ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதனிடையே, மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவிகித இட ஒதுக்கீடும், சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடும் அளித்து ஜூன் 22ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
ஆனால் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக மாணவர் சேர்க்கை இருக்கக் கூடாது என்று கூறி தமிழக அரசின் 85 சதவீத இட ஒதுக்கீட்டு ஆணையை உயர்நீதிமன்றம் கடந்த 14ம் தேதி ரத்து செய்தது.
அரசாணை ரத்தை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசாணை செல்லாது என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.