நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திலிருந்து மட்டும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தனிமனித இடைவெளியுடன் இருக்கைகளை அமைப்பதற்காக வழக்கத்தைவிட தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வெழுதும் மாணவர்கள் முகக் கவசம், கையுறை அணிந்து வருவதோடு, சானிடைசர், நுழைவு அட்டை, அடையாள அட்டை ஆகியவை தேர்வறைக்குள் கொண்டுச் செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு உடலை தொட்டு செய்யப்படும் பரிசோதனைகள் இல்லாமல் நீளமான கைப்பிடியுடன் கூடிய மெட்டல் டிடெக்டர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 99.4 பாரண்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பநிலை இருக்கும் மாணவர்கள், தனி அறையில் அமரவைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் வேலூரில் 2 தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.