தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள 5,413 இடங்களுக்கு, 11 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்தாண்டைவிட 60 சதவீதம் அதிகமாக விண்ணப்பம் செய்துள்ளதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குருப் 2 ஏ பணியிடங்களில் 5,413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23-ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இவர்களுக்கான போட்டித் தேர்வுகள் வரும் மே மாதம் 21ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது.
இந்தத் தேர்வுகளுக்கு பிப் 23ஆம் தேதியில் இருந்து, மார்ச் மாதம் 23ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் தேர்வுகள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பிற்பகல் வரை 10,52,839 பேர் விண்ணப்பம் செய்த நிலையில், இறுதி எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டிவிட்டதாக, அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இத்தேர்வுகளில், முதல்நிலைத் தேர்வுகளில் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இது 3 மணி நேரம் நடத்தப்படும். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை இதற்கு 11 லட்சம் பட்டதாரிகள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களை விட இந்த ஆண்டு 60 விழுக்காடு பட்டதாரிகள் அதிகமாக விண்ணப்பித்து இருப்பதாகவும் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய செய்தி: சிதம்பரத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு