'முன்மாதிரி பள்ளிகள், அறிவுசார் நகரம்': பட்ஜெட்டில் மாணவர்களுக்கான திட்டங்கள் என்ன?

'முன்மாதிரி பள்ளிகள், அறிவுசார் நகரம்': பட்ஜெட்டில் மாணவர்களுக்கான திட்டங்கள் என்ன?
'முன்மாதிரி பள்ளிகள், அறிவுசார் நகரம்': பட்ஜெட்டில் மாணவர்களுக்கான திட்டங்கள் என்ன?
Published on

2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி, உயர் கல்வி,  சமூக நலத் துறைகளின் கீழ் வெளியான மாணவ, மாணவிகளுக்கான அறிவிப்புக்களின் முழுமையான விவரம்...

தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி, உயர் கல்வி,  சமூக நலத் துறைகளின் கீழ் வெளியான மாணவ, மாணவிகளுக்கான அறிவிப்புகள்:

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்கு வரும் நிதியாண்டிற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பெற உதவும் நோக்கோடு கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகளை இந்த அரசு உருவாக்கியுள்ளது. வரும் நிதியாண்டில் மேலும் 15 மாவட்டங்களில் இத்தகைய முன்மாதிரி பள்ளிகளை உருவாக்க 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து அரசு பள்ளிகளையும்  நவீனமயமாக்கும் திட்டத்திற்காக 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தும், இதற்காக வரும் நிதியாண்டில் 1300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாவட்ட மத்திய நூலகங்கள் ஏற்படுத்தப்படும்

புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும். மேலும், மரபுகளை கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு நான்கு இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும். புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கிய திருவிழாக்கள் வரும் ஆண்டில் 5.6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

தமிழகத்தில் திறன்மிக்க மனித வளத்தை உருவாக்குவதற்காக உலகளாவிய பங்களிப்புடன் 'அறிவுசார் நகரம்' உருவாக்கப்படும் இந்த நகரம் உலக புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கிளைகளை கொண்டிருக்கும்

தமிழகத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்து கொண்டு வருகிறது. அதற்கேற்ப அரசுக் கல்லூரிகள் மற்றும் பல தொழில்நுட்ப கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள் அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும், இதற்காக இவ்வாண்டு 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.



முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்காக 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

நான் முதல்வன் திட்டத்திற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ஐஐடி, என்ஐடி, எய்ம்ஸ் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலை படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும். 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்த உதவியை பெறலாம்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கை மிக குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு,தொழிற் படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். கல்வி உதவித்தொகை பெற்றாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம், இதற்காக 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com