மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி மூலம் ஆன்லைன் தேர்வுக்கான விடைத்தாள்கள் காணாமல் போயுள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவையாவும் பழைய கடையிலிருந்து விடைத்தாள்கள் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைநிலை கல்வி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 2021-க்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த மாதம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதி விடைத்தாள்களை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்கத்திற்க்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மாணவர்கள் அனுப்பிய விடைத்தாள்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அறை ஒன்றில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்த சுமார் 500 முதல் 1000 பழைய விடைத்தாள்கள் வரை காணவில்லை என தெரியவந்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் உத்தரவின் பேரில் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பழைய பேப்பர் கடைக்கு காமராஜர் பல்கலைக்கழக விடைத்தாள்கள் எடைக்கு போட வந்ததாகவும் பின்னர் அந்தக் கடை மூலமாக மதுரை விரகனூர் பகுதியில் உள்ள மொத்த பேப்பர் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பல்கலைக்கழக ஊழியர்கள் உடனடியாகச் சென்று அங்கிருந்த விடைத்தாள்களை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து புதிய தலைமுறை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமாரிடம் கேட்டபோது, “இது குறித்து பல்கலைல்கழகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த விடைத்தாள்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அறை ஒன்றில் அடுக்கிவைக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழக வளாக ஓரத்தில் பழைய பேப்பர்களை சேகரித்து விற்பனை செய்யும் சிலர் ஜன்னல் வழியாக நீளமான குச்சிகள் உதவியுடன் பேப்பர் கட்டுகளை திருடி எடுத்து சென்று எடைக்கு போட்டதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது” என தெரிவித்தார். இருப்பினும் இது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் எனவும் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தெரிவித்தார்.
இதே போல் கடந்த ஆண்டும் விடைத்தாள்கள் மாயமானது குறிப்பிடத்தக்கது. தொலைதூரக் கல்வியில் பயின்று தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமான விவகாரம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விடைத்தாள்கள் தொலைந்தது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் மூலம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமார் தெரிவித்தார்.
- செய்தியாளர்: இரா.நாகேந்திரன்