“இந்த வருடம் பள்ளி வளாகங்களில் வரம்புகளை மீறி நடந்து கொண்ட மாணவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்கள் என குறிப்பிடப்படாமல், அந்த மாணவர்கள் தேர்வு எழுத பள்ளிக்கல்வித் துறை அனுமதித்துள்ளது” என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
`குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களின் கல்வியில் புதிய போக்குகள்’ என்கிற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தொடக்கிவைத்தார். அந்நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு திரும்பியுள்ள மாணவர்களை எப்படி அணுக வேண்டும், ஆசிரியர்கள் மாணவர்களிடம் எப்படி கேள்விகளை கேட்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் தெரியவரக்கூடிய முடிவுகள் வழியாக அறிந்து, அதன்மூலம் மாற்றங்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.
மாணவர்கள் ஆசிரியர்கள் இடத்தில் பள்ளி வளாகங்களில் ஒழுங்கீனமாக வரம்புகளை மீறி நடந்து கொண்டால், அவர்களின் மாற்றுச் சான்றிதழில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்கள் என கொடுக்கப்படுமென பேரவையில் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தேன். இதை சற்று தெளிவுப்படுத்த விளைகிறேன். அதாவது, மாணவர் தவறு செய்தவுடனேயே இப்படி குறிப்பிட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது. எல்லை மீறுகின்ற போதுதான் மாற்று சான்றிதழில் அப்படி குறிப்பிட்டு வழங்கப்படும். அதை தவிர்க்க இயலாது.
அடுத்த வருடத்துக்கு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது துவங்குவது என்பது குறித்து பலரும் கேட்பதை காணமுடிகிறது. அதுகுறித்து தேர்வுகள் முடிந்த பிறகே முடிவு எடுக்கப்படும். அரசுப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை வரும் கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி நேரத்தை மாற்றுவது குறித்த இதுவரை எந்த முடிவையும் பள்ளிக்கல்வித்துறை எடுக்கவில்லை.
தனியார் பள்ளி நிர்வாகிகள் பொது தேர்வு நடைபெறும் மையங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு இருந்தால் எந்த பள்ளியாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.