தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு, ஜனவரி மாதத்துக்கு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கமாக தமிழகத்தில் ஜூன் மாதத்தில் கலந்தாய்வு நிறைவுப் பெற்று, ஜூலையில் எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடங்கும். ஆனால் இந்த வருடம் EWS (பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்), வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ஆகியவை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வே இன்னும் நடக்காமல் உள்ளது. கலந்தாய்வு மேலும் தள்ளிப்போவதால், இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி திறப்பு ஐந்து மாதங்கள் தாமதம் ஆகிறது.
மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஜனவரி 2வது வாரத்துக்கு தள்ளிப்போவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வுக்கான அறிவிப்பாணை வெளியான உடன், மருத்துவக் கல்வி இயக்குநரகமும் கலந்தாய்வுக்கான அறிவிப்பாணையை வெளியிடும் என சொல்லப்பட்டுள்ளது.
EWS வழக்கில் அடுத்த விசாரணை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அதன் பிறகே அறிவிப்பாணை வெளியாகும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். நீட் தேர்வு முடிவுகள் இந்திய அளவில் கடந்த நவம்பர் மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் முதுநிலை தொழில்நுட்ப படிப்புகளுக்கான கலந்தாய்வும் வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: முதுநிலை மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு நிறுத்தம் - உச்சநீதிமன்றம் உத்தரவு