இன்று முதல் பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்க உள்ளது. ஆன்லைன் மூலம் முதல் முறையாக பொது பிரிவினருக்கு மருத்துவ கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது. tnmedicalselection.org என்ற இணையத்தின் மூலம் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் இணையத்தில் தங்களை பதிவு செய்துக் கொள்வதற்கான அவகாசம் ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை முடிந்தது. பதிவு செய்த மாணவர்கள் நாளை முதல் கலந்தாய்வில் பங்கேற்கலாம். tnmedicalselection.org என்ற இணையத்தில் log in செய்து choice filling அதாவது எந்தெந்த கல்லூரிகள் வேண்டும் என மாணவர்கள் தேர்வு செய்யலாம். உதாரணமாக மாணவரின் முதல் விருப்பம் சென்னை மருத்துவக் கல்லூரி, இரண்டாவது விருப்பம் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மூன்றாவது மதுரை மருத்துவக் கல்லூரி என்றால் அந்த வரிசையிலேயே கல்லூரிகளை தங்கள் பட்டியலில் சேர்க்கலாம்.
இதில் அதிகபட்சமாக எத்தனை கல்லூரிகளை சேர்க்கலாம் என கட்டுப்பாடு கிடையாது. அனைத்து கல்லூரிகளையும் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து பட்டியல் தயார் செய்துக் கொள்ளலாம். அதில் கல்லூரிக்ளை சேர்க்கவும், விலக்கவும், பட்டியலின் வரிசையை மாற்றியமைக்கவும் வசதி உள்ளது. அந்த பட்டியல் முடிவு செய்தவுடன் choice lock என்ற ஆப்ஷன் மூலம் இறுதி செய்யலாம். அப்போது செல்போன் எண்ணுக்கு வரும் otp ஐ அதில் பதிவிட வேண்டும். அதன் பின் இந்த விருப்ப பட்டியலை மாற்ற முடியாது.
இதை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள முடியும். பிப்ரவரி 2ம் தேதி (இன்று) காலை 8 மணி முதல் பிப்ரவரி 5ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வு செய்து இறுதி செய்ய வேண்டும். அதன் பின் பிப்ரவரி 7ம் தேதி மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். பிப்ரவரி 10ம் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் செல்ல வேண்டும். அதற்காக மாணவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்த 3 மையங்களில் ஒன்றுக்கு அழைக்கப்படுவார்கள்.
பிறகு யார் யாருக்கு எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று முடிவுகள் பிப்ரவரி 15ம் தேதி வெளியாகும். இந்த முடிவுகளை மாணவர்கள் பிப்ரவரி 16ம் தேதி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பிப்ரவரி 17ம் தேதி முதல் பிப்ரவரி 22ம் தேதி மாலை 3 மணிக்குள் கல்லூரியில் சென்று தங்கள் அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து சேர வேண்டும்.
- சுகன்யா