நீட் தேர்விற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி, ஒரே ஒரு மாணவருக்காக மட்டும் இன்று வகுப்பை தொடங்கியுள்ளது. சிதாந்த் என்ற மாணவருக்காக பேராசிரியர்கள் வகுப்பெடுத்து வருகின்றனர்.
பேராசிரியர்களும், மூத்த மாணவர்களும் நன்றாக பழகுவதாக கூறியுள்ள அந்த மாணவர், தனியாக வகுப்பில் அமர்ந்திருப்பது புதுமையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. நீட் தேர்வு மூலம் மாணவர்களை சேர்க்க முடியாது என்று கூறியுள்ள அந்த கல்லூரி நிர்வாகம், உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் மகன் சிதாந்த் என்ற மாணவருக்கு மட்டும் மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் அளித்துள்ளது. மீதமுள்ள இடங்களை நிரப்பவில்லை. சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படும் அந்த கல்லூரியில், நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் வரவுள்ளது.