பொறியியல் படிப்புகளில் சேர கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை படித்திருப்பது கட்டாயம் அல்ல என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.
2021 மற்றும் 22 ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கை குறித்த விவர குறிப்பேட்டை ஏ.ஐ.சி.டி.இ வெளியிட்டது. அதில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர இயற்பியல், கணிதம், கணினி அறிவியல், உயிரியல், தொழில்முனைவோர் உள்ளிட்ட 14 பாடங்களில் ஏதேனும் மூன்றை படித்திருந்தாலே போதுமானது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு கல்வியாளர்கள் தங்களது அதிருப்தியை பதிவு செய்தனர். மாணவர்கள் மத்தியிலும் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள ஏஐசிடிஇ, “ பலதரப்பட்ட பாடப் பின்னனியில் இருந்து வரும் மாணவர்கள் மத்தியில் தொழில்நுட்பக் கல்வியை கொண்டு சேர்க்கவும், இயற்பியல், கணித பாடம் சம்பந்தமில்லாத உயர்கல்வியை பயிலும் மாணவர்கள் மத்தியில் அழுத்தத்தை குறைக்கவுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் துறை சார்ந்தவர்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது .