கீரனூரை சேர்ந்த எஸ்.உதயபாலா என்பவர் மாணவர்களும், மக்களும் பயன்படும் வகையில் தனது சொந்த செலவில் தங்கள் ஊரிலேயே ‘அம்பேத்கர் படிப்பகம்’ என்ற இலவச நூலகம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். ரயில்வே துறையில் வேலை செய்யும் இவர், கவிதைகள் கட்டுரைகள், நாவல்களை எழுதுவதில் ஆர்வம் மிக்கவராம்.
அறிவை தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்
அம்பேத்கரின் பொன்மொழி
இந்த பொன்மொழிக்கு ஏற்ப ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயர கல்வியறிவானது அவசியமாகிறது. அத்தகைய கல்வியை கற்கவும், அறிவை வளர்த்துக்கொள்ளவும் நூலகமானது அவசியமாகிறது. அப்படிபட்ட ஒரு நூலகத்தை திறந்து மக்களுக்கு வழிகாட்டி இருக்கிறார் உதயபாலா.
“கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளையின் கல்விக்கு செலுத்து அது உனக்கு பயன் தரும்”
அம்பேத்கர்
இலவச நூலகம் குறித்து உதயபாலா நம்மிடையே பேசுகையில், “இதுவரை இந்நூலகத்தில் 2,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எழுத்தாளர் கௌதம சன்னா அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அம்பேத்கரியத்தின் 50 தொகுதிகள் இங்கே படிக்க கிடைக்கும். மேலும், கம்யூனிசம், பெரியாரியம் சார்ந்த புத்தகங்களையும் தொடர்ந்து சேகரித்து வருகிறோம்.
இலக்கியத்தில் ஜெயகாந்தன், பெருமாள் முருகன், இமையம், அழகிய பெரியவன், எஸ்.ராமகிருஷ்ணன், ஆகியோரது புத்தகங்கள் இடம் பெற்றிருக்கின்றன.கீரனூரில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில்தான் நமது "அம்பேத்கர் படிப்பகம்" செயல்படுகிறது. நாம் வாழும் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகம் நான் வாசிக்க துவங்கிய நாள் முதலாகவே என்னுள் இருந்ததுதான். ஆனால் அதற்கான வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. தன்னை வளர்த்திக்கொண்டால்தான் இங்கு எதுவுமே செய்ய முடியும் என்பது எனது சமூகத்தின் யதார்த்த உண்மையாக இருந்தது.
குறிப்பாக நான் வாழும் கீரனூரில் ஒடுக்கப்பட்ட சமூகங்களில் கல்வி என்பது இன்னுமே முதல் தலைமுறையளவில்தான் இருக்கிறது. அது இப்போது சில குடும்பங்களில் இரண்டாம் தலைமுறையைக் கடந்திருந்தாலும் முதல் தலைமுறை கற்றலே இன்னும் முழுமையாகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேவேளையில் முதல் தலைமுறையாகப் படித்து அதில் சாதித்தவர்கள் நம்மில் அதீதம் என்றுதான் நினைக்கிறேன். அதே நம்பிக்கையோடுதான் என்னையும் என் பெற்றோர்களும் படிக்க வைத்தார்கள்.
வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கடமையை செய்வோம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது எதிரியும் நம்மை மதிக்க தொடங்குவான் - அம்பேத்கர்
அரசுப் பள்ளியில் படித்த எனக்கு எந்த இலக்குகளும் பெரிதாக இருக்கவில்லை. ஆனால், படிக்காத என் பெற்றோர்கள் என்னை அரசுப் பணியாளனாக்கவே அவர்கள் தம் உடலை வருத்தி உழைத்தார்கள். நான் படித்த காலத்தில் பள்ளிப் பாடத்தில் சுமாராகவே படித்தாலும் நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தை எட்டாம் வகுப்பிலிருந்தே வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஆகவே, சமூகத்தைப் பற்றியும் கல்வியின் தேவையைப் பற்றியும் உணர முற்பட்டதன் விளைவாகவே என்னுள் ஒரு படைப்பாளியைத் தேடிக் கொணர்ந்து கல்லூரி காலகட்டத்தில் கவிஞனாக பரிமாணிக்கத் துவங்கினேன்.
அப்போது எனது கவிதைகள் தினத்தந்தி இளைஞர் மலர், ஞாயிறு மலர், மாணவர் ஸ்பெஷல், தமிழச்சி, தமிழர் உலகம், தன்னம்பிக்கை போன்ற மாத இதழ்களிலும் கூட எனது கவிதைகள் தொடர்ச்சியாக வந்திருக்கிறன. இதனால், கல்லூரி முடித்ததும் பத்திரிகையாளனாக வேண்டும் என்ற நோக்கமே என்னுள் மேலிட்டிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை , முதல் முயற்சியிலேயே ரயில்வே போட்டித் தேர்விலும் வெற்றி பெற்று ரயில்வே பணியாளனாக மாறினேன். ஆனால் என்னுள் இருந்த எழுத்தின் தாகமானது தணியவில்லை. தொடர்ந்து எழுதியும் வாசித்தும் வருகிறேன். தொடர் வாசிப்பின் நீட்சிதான் இன்று " அம்பேத்கர் படிப்பகம்" என்ற இலக்கினை எட்ட வைத்துள்ளது. எனக்கு உதவியாக க. ராஜா, மற்றும் ந.பெரியசாமி ஆகியோர் உதவி செய்தனர்.
இன்னும் பல ஆளுமைகளின், உறவுகளின் உணர்வாலும், உழைப்பாலும் நமது " அம்பேத்கர் படிப்பகம்" ஒரு சமூக நிறுவனமாக செயல்படும் என்ற நம்பிக்கையை என்னால் இப்போது நிச்சயமாக கூற முடியும். வாருங்கள் தோழமைகளே அண்ணலின் கருத்தியலோடு நம்மில் கற்றலை முழுமையாக்கி, கற்பிக்கத் துவங்குவோம்... ஒன்று சேர்வோம்... போராடுவோம்...” என்கிறார் எஸ்.உதயபாலா.