மதுரையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டன.
கொரானா நோய்த் தொற்று எதிரொலியால் பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களின் நலன் கருதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக மாணவ மாணவிகளிடம் இருந்து தொடர் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து அதன்படி ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடவேளையும் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும், நாளொன்றுக்கு ஒரு ஆசிரியர் ஆறு வகுப்புகளும், வாரத்திற்கு 28 ஆன்லைன் வகுப்புகளும் எடுக்க வேண்டும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும் , 30 முதல் 45 நிமிடங்கள் 2 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்படுவதோடு, ஆன்லைன் வகுப்புகளுக்கு குழந்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் ஆசிரியர்கள் செல்போனுக்கு முன்பாக இருக்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரையில் இன்று தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன. இதில், மாணவர்கள் பள்ளிச்சீருடையுடன் பள்ளிகளில் இருப்பது போலவே செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றனர்.