தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில், குழந்தைகளுக்கான உதவி எண், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகள், காவல்துறை உதவி எண் போன்ற விவரங்களை சேர்க்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குநர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த செந்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. நிர்பயா நிகழ்வுக்குப் பிறகு போதிய சட்ட திருத்தங்கள் செய்த பின்னரும் மக்களிடம் குறிப்பாக பெண்களிடம், பெண் குழந்தைகளிடம் அது குறித்து முறையான விழிப்புணர்வு இல்லை.
பெரும்பாலான வளரிளம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறோம் என்பதே தெரியவில்லை. அது குறித்து தெரிந்தாலும் வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். அதற்குப் போதுமான சட்ட அறிவு குறித்த விழிப்புணர்வு இன்மையே காரணம் ஆகும். இந்த இடத்தில், குழந்தைகளின் சட்ட உரிமை குறித்து பள்ளிப் பருவத்திலிருந்தே கற்பிக்க வேண்டியது கடமையாக உள்ளது.
இதையும் படிங்க... பாடப்புத்தகங்களில் தலைவர்களின் சாதிப் பெயர்கள் நீக்கம்
கேரள அரசின் பாடப்புத்தகத்தில் பள்ளிக் குழந்தைகள் உரிமை எனும் தலைப்பில் வாழ்வுரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாலியல் மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை, குழந்தை தொழிலாளர்கள் மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான உரிமை உள்ளிட்டவை குறித்து விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதோடு குற்றத்தடுப்பு எண், இலவச உதவி எண், கேரள காவல்துறையினரின் உதவி எண் ஆகியவையும் அச்சிடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் அதுபோல 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில், குழந்தைகளுக்கான உதவி எண், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகள், காவல்துறை உதவி எண் போன்ற விவரங்களை பாடப்புத்தகத்தில் சேர்க்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு, இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
- இ.சகாய பிரதீபா