பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி!
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி!
Published on

வறுமையின் காரணமாக மேற்படிப்பை தொடர இயலாத பின்தங்கிய மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. 

12 ஆம் வகுப்புக்கு பிறகு உயர்கல்வியை தொடர விரும்பும் ஏழை மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் சில வருடங்களாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில்  இம் மூன்று மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டும் இளநிலை பட்டப்படிப்பை இலவசமாக படிக்க முடியும். அதற்கான முழு செலவையும் சென்னை பல்கலைக்கழகமே ஏற்கும்.

இலவச உயர்கல்வி திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயில விரும்பும் வசதியில்லாத மாணவர்கள், பிளஸ்-டூ தேர்வு முடிவு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

யாரெல்லாம் இத்திட்டம் மூலம் பயனடையலாம்?

1. பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஆதரவற்ற விவசாய மற்றும் கூலி வேலை செய்யும் பெற்றோரின் குழந்தைகள், விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

2. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

3. மாற்றுத்திறனாளி, திருநங்கை, ஆதரவற்றோர், விதவைகளின் பிள்ளைகள் போன்றோர் - பிளஸ்-டூ தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

4. முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருந்தால், பிளஸ்-டூ தேர்வில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 

5. விவாகரத்தான பெண்களின் பிள்ளைகளாக இருந்தால், பிளஸ்-டூ தேர்வில் குறைந்தபட்சம் 70% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தின் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, குறிப்பிட்ட சான்றிதழ்களுடன் பிளஸ்-டூ தேர்வு முடிவு வெளியான 15 நாட்களுக்குள் பல்கலைக் கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலேயே கவுன்சிலிங் நடத்தப்பட்டு பின் கல்லூரியில் சேர்க்கப்படுவர்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 08.05.2019

மேலும் முழு விவரங்கள் பெற, www.unom.ac.in - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com