ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, கடந்த 2009-ம் ஆண்டு கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011-ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், 2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி, வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி, தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்தார். அப்போது, 12 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுவதில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து, 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், 12 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல், ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதித்துள்ளதாக கண்டித்த நீதிபதி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை எனக் கூறியுள்ளார்.
அறிவு , திறமை, தொழில்நுட்ப அளவில் தங்களை முன்னேற்றிக் கொள்ளும் ஆசிரியர்களால் மட்டுமே திறமையாக பயிற்றுவிக்க முடியும் எனவும், தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் எனவும், இதுசம்பந்தமான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.