நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்துவரும் சூழ்நிலையில், தமிழக பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு உண்டா இல்லையா என்ற குழப்பம் நிலவிவருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடுமுழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது. நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை நாளை மாலை 5 மணிமுதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் கூறியிருக்கிறது.
தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுகுறித்து பேட்டியளித்துள்ளார். அதில், ’’நீட் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தமிழக அரசின் தெளிவான முடிவு பின்னர் அறிவிக்கப்படும். அதேசமயம், நீட் தேர்வுக்காக தமிழக அரசின் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. அதேசமயத்தில், நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.